

வேளாண் சமூகத்தினர் பிரச்சினை பழையது, ஆழமானது. இப்பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டே தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியின்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கஜேந்தர் சிங் அங்கிருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நிலச் சட்டத்தை எதிர்த்து அவர் டெல்லி முதல்வர், ஆயிரக்கணக்கான் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் தூக்குப் போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பின. இதனையடுத்து மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்தார்.
அவர் பேசும்போது, "வேளாண் சமூகத்தினர் பிரச்சினை பழையது, ஆழமானது. மிகவும் பரந்து விரிந்து கிடக்கும் பிரச்சினையும்கூட. எனவே இப்பிரச்சினைக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டே தீர்வு காண வேண்டும்.
விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்க்கட்சியினர் வழங்கும் எந்த ஒரு யோசனையையும் திறந்து மனதுடன் ஏற்றுக் கொள்ள பாஜக அரசு தயாராக இருக்கிறது.
நேற்றைய சம்பவம் தேச முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
விவசாயிகள் உயிரைவிட முக்கியமானது எதுவும் இல்லை. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் விவசாயிகள் துயர் துடைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனாலும், பிரச்சினை இதுவரை தீரவில்லை. விவசாயிகள் பிரச்சினையில் ஆழ, அகலத்தை உணர்ந்து அதற்கேற்ப நாம் தீர்வுகளை வகுக்க வேண்டும்.
விவசாயிகள் துயர் துடைக்கும் நடவடிக்கைகளில் இதற்கு முன் ஆண்ட கட்சியும், தற்போதைய ஆளும் கட்சியும் எங்கே பின் தங்கியிருக்கிறது என்பதை ஆராய வேண்டும். என்ன தவறு செய்திருக்கிறது என்பதை பகுப்பாய்ந்து தீர்வுகளை சீர்திருத்த வேண்டும். விவசாயிகள் தற்கொலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, இப்பிரச்சினையில் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒன்றுபட்டு தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக பேசிய ராஜ்நாத் சிங், "பாஜக அரசு விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்கும். அவர்கள் நலனை பேணும் அனைத்து உதவிகளையும் இந்த அரசாங்கம் செய்யத் தவறாது. விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.