

அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக சோனியா தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் பிறந்த நாள் விழா குழுத் தலைவராக சோனியா பொறுப்பேற்றுள்ளார். இணை தலைவராக ராகுல் காந்தியும் துணை தலைவராக சுஷில்குமார் ஷிண்டேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி நீண்ட விடுப்பில் இருப்பதால் நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அவர் டெல்லி திரும்பிய பிறகு அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்களை ஒருங்கிணைப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி, மும்பை, நாக்பூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அம்பேத்கர் பிறந்த இடமான மத்தியப் பிரதேசம் மாவ் பகுதியில் சிறப்பு கொண்டாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.