

கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு சுமார் 100 சதவீத ஊதிய உயர்வு வழங்கும் மசோதா அனைத்து கட்சி உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாட்டிலே அதிக ஊதியம் மற்றும் இதர படிகளை கர்நாடக பேரவை உறுப்பினர்கள் பெறுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாநில சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா ஊதிய உயர்வை வரையறுக்கும் சட்ட மசோதாவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு தொடர்பான சட்ட மசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களும் முழு ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உறுப்பினர்களின் ஊதியம் சுமார் 100 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதன்படி மாதம் ரூ.30 ஆயிரமாக இருந்த முதல்வரின் ஊதியம் ரூ.50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதே போல ரூ.25 ஆயிரமாக இருந்த அமைச்சரின் ஊதியம் ரூ. 40 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக வும், அவர்களது தொலைப்பேசி படி ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்ந்திருக்கிறது.
மேலும் முதல்வர், அமைச்சர்களின் தொலைப்பேசி, வீட்டு வாடகை, பயணப்படி உள்ளிட்ட இதர படிகள் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கு 1,000 லிட்டர் பெட்ரோலும், வீட்டு வாடகையாக ரூ.80 ஆயிரமும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வின் காரணமாக கர்நாடக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.44 கோடி கூடுதலாக செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் களின் அதிகப்படியான ஊதிய உயர்வுக்கு சமூக ஆர்வலர்களும் அரசியல் விமர்சகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தங்களது வலைப்பக்கங்களிலும், சமூக வலை தளங்களிலும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.
அதில், “கர்நாடக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள சுமார் 100 சதவீத ஊதிய உயர்வு அடிப்படை அரசியல் அறத்திற்கு எதிரானது. மக்கள் பிரதிநிதிகள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களால் எளிதில் அணுகக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வை பிரதிபலிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
முறைகேடாக சம்பாதித்த பணத்தில் படாடோபமாக வலம் வரும் அரசியல்வாதிகள் தற்போது தங்களின் ஆடம்பரத்தை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வின் மூலம் நாட்டிலே அதிக ஊதியம் பெறுகிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்ற பெயரை கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெற்றுள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் அதிக ஊதியம் பெறும் இந்த உறுப்பினர்கள் இனியாவது தங்களது பொறுப்பை உணர்ந்து கடமையாற்ற வேண்டும். கடந்த காலங்களின் சட்டப்பேரவையில் அரங்கேறிய அவலங்கள் இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்ப்பது, கிரிக்கெட் போட்டியை பார்ப்பது, தூங்குவது, அரட்டை அடிப்பது மற்றும் மக்களுக்கு பயன்படாமல் வீணாக தர்ணாவில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கர்நாடக அரசு தனி மசோதா கொண்டுவர வேண்டும். அப்போது தான் இந்த ஊதிய உயர்வு அர்த்தமுள்ளதாக இருக்கும்''என தெரிவித்துள்ளனர்.