

வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், கொள்கை அளவில் இந்திய அரசின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்தார்.
"பிரதமர் நரேந்திர மோடி நிறைய சரியான விஷயங்களைப் பேசிவருகிறார். ஆனால், சரியான விஷயங்களை செய்து முடிப்பதில்தான் சவால்கள் உள்ளன. இந்த 10 மாத கால ஆட்சியில் அவர் இதனைச் செய்ததாகத் தெரியவில்லை.
இப்போது அனைத்தும் பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பிரதமர் அலுவலகத்தின் சம்மதம் இல்லாமல் ஒருவரும் நகர்வதில்லை. ஒவ்வொரு கோப்பும் பிரதமர் அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கிறது. என்ன செய்யப் போகிறார்கள் என்பது உண்மையில் கவலையளிக்கும் அம்சமாக உள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் என்ற கற்பனை நயம் வாய்ந்த புதிய லேபிள் கிடைத்துள்ளது. புதிய குறிக்கோளை இது உள்ளடக்கியது. ஆனால், பழைய வெற்றி பெறாத திட்டங்களை விட இதற்கு குறைவான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 3,40,000 புதிய கழிவறைகளைக் கட்டும் திட்டம் சாத்தியமில்லாமல் போகக் கூடிய வாய்ப்புள்ளது.
இது மோசமான ஒரு அரசியல் கபட வேடம் என்று அஞ்சுகிறேன். இது வருத்தமளிக்கக் கூடியது.
அடையாள அரசியலையும் இந்துத்துவாவையும் வைத்து கட்டமைக்கப்பட்ட கட்சி அது என்றாலும் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஆகியவை பற்றியே பேசினார்” என்று கூறியுள்ளார் சசி தரூர்.