நிலம் கையக மசோதா விவகாரத்தில் எதையும் சந்திக்கத் தயார்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேட்டி

நிலம் கையக மசோதா விவகாரத்தில் எதையும் சந்திக்கத் தயார்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேட்டி
Updated on
1 min read

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். இது தொடர்பாக அவர் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா தடைபட்டு நிற்கவில்லை. தடைகள் அகற்றப்பட்டு விட்டன. மாநிலங்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும் நிலக்கரி மசோதா, சுரங்கம் மற்றும் கனிமங்கள் மசோதா ஆகியவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே பொறுத்திருந்து பாருங்கள்.

நிலம் கையக மசோதாவில் மக்களவையில் 9 திருத்தங்கள் செய்துவிட்ட பிறகு இதற்கு மேல் ஆட்சேபணை தெரிவிக்க எதுவுமில்லை. இதில் நாங்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை. விரிவாக ஆலோசனை மேற்கொண்டோம்.

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் வளர்ச்சியை விரும்பவில்லை. அரசுக்கு நற்பெயர் கிடைப்பதை விரும்பவில்லை. தடைபட்டுள்ள வளர்ச்சி நீடிக்கவே விரும்புகின்றனர். இதற்கு நாங்கள் தயாரில்லை. நாங்கள் செயல்பட விரும்புகிறோம். இந்த மசோதா விவகாரத்தில் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

மக்கள் எங்களுடன் இருப்பார்கள். இரு அவை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறும் என நம்புகிறேன். மேலும் திருத்தங்கள் செய்ய அரசு தயாராக உள்ளதா என கேட்கிறீர்கள். இந்த மசோதாவில் தேவையான திருத்தங்களை அரசு செய்துள்ளது. அர்த்தமுள்ள பரிந்துரைகள் இருந்தால் கூறட்டும். அதனை நாங்கள் ஆராய்வோம்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு ஆவலாக உள்ளது. ஆனால் மாநிலங்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லாததால் எங்கள் பாதை தடைபட்டுள்ளது. சில நேரங்களில் சட்ட நடவடிக்கைகளும் நாட்டின் வளர்ச்சியும் நாடாளுமன்றத்தால் தடுக்கப்படுகிறது.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in