வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்ய ஆளுநர்களுக்கு மத்திய அரசு தடை: குறைந்தபட்சம் 292 நாட்கள் தங்கியிருக்க உத்தரவு

வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்ய ஆளுநர்களுக்கு மத்திய அரசு தடை: குறைந்தபட்சம் 292 நாட்கள் தங்கியிருக்க உத்தரவு
Updated on
1 min read

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி வெளிமாநிலங்களுக்கு ஆளுநர்கள் பயணம் செய்யக் கூடாது, மாநிலத்தில் குறைந் தபட்சம் 292 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். பதவி விலக மறுத்த சில ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வேறு சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆளுநர்களில் சிலர் தங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை தவறாக பயன்படுத்தி வருவதாக பரவலாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக பணியாற்றும் மாநிலத்தில் அதிக நாட்கள் தங்கியிருப்பது இல்லை என்றும் சொந்த மாநிலம் மற்றும் இதர பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களுக்கு ஆளுநர்கள் செல்ல மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் 18 அம்சங் கள் கொண்ட புதிய வழிகாட்டு நெறி களை வரையறுத்து அறிவிப் பாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு மாநிலத்தின் ஆளுநர் அந்த மாநிலத்தில் குறைந்தபட்சம் 292 நாட்கள் கண்டிப்பாக தங்கியிருக்க வேண் டும். வெளிமாநில பயணங்கள் குறித்து குடியரசுத் தலைவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே வெளிமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம். அவசர கால பயணம் குறித்து குடியரசுத் தலைவரிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

பணியாற்றும் மாநிலத்தை விட்டு வேறு இடங்களுக்குச் செல்லும்போது குறைந்தது ஒரு வாரம் முதல் 6 வாரங்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அந்தப் பயணம் அரசு முறைப் பயணமா, தனிப்பட்ட பயணமா, உள்நாடா, வெளிநாடா என்பன குறித்த அனைத்து விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் ஆளுநரின் பயணங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரி அனுப்பப்படும் கடிதங்களின் நகல்கள் பிரதமரின் தனிச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கும் அனுப்பப்பட வேண்டும்.

ஆளுநர்களின் தனிப்பட்ட பயணத்தை ஒருபோதும் அரசு முறைப் பயணமாக மாற்றக் கூடாது. பயண நாட்களின் எண்ணிக்கை காலண்டர் ஆண்டின் மொத்த நாட் களில் 20 சதவீதத்தை தாண்டக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டுப் பயணத்தைப் பொறுத்தவரை வெளிநாடு பங் களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஆளுநர்கள் ஒப்புதல் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, சில ஆளுநர்கள் அடிக்கடி தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணம் செய்வதாக புகார்கள் எழுந்துள் ளன. எனவே இந்த விவகாரத்தில் இப்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in