

ஏமனில் போர் சூழலிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் 350 பேர் கொண்ட குழு, கடற்படை விமானம் மூலம் பாதுகாப்பாக நாடு திரும்பினர்.
ஷியா கிளர்ச்சிப் படைக்கு எதிராக, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய கூட்டணி நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏமனில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியர்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்துவரும் பணியில் உள்துறை அமைச்சகத்துடன் கடற்படை ஈடுபட்டு வருகிறது.
ஐ.என்.எஸ். கவரத்தி, கோரல்ஸ், மற்றும் ஐ.என்.எஸ். சுமித்ரா, உள்ளிட்ட போர்க் கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் மூலம் பல்வேறுக் குழுக்கள் அமைத்து மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் துறைமுகம் வந்தடைந்தனர்.
இரு பிரிவாக மீட்பு:
ஏமனிலிருந்து 220 ஆண்கள், 101 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் என மீட்கப்பட்ட 349 இந்தியர்கள் அனைவரும் ஏமனின் ஜிபவுத்தி துறைமுகத்துக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் அவர்களுள் 190 பேர் கொண்ட குழுவுடன் விமானப் படையின் சி-17 ரக க்ளோப்மாஸ்டர் விமானம் சரியாக அதிகாலை 3.25 மணிக்கு மும்பை வந்தடைந்தது.
மேலும் 168 பயணிகள் மற்றும் குழுவோடு மற்றொரு வந்த மற்றொரு விமானம் காலை 2 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
மும்பைக்கு வந்தடைந்த விமானத்தில் வந்த இந்தியர்களின் சில கோப்புகளை சரி பார்க்க வேண்டியிருந்ததாலும் பலருக்கு பாஸ்போர்ட் கூட இல்லாமல் இருந்ததாலும் இடையூறு காரணமாக விமானம் வந்தடைய சிறிது தாமதமானதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
ஏமனில் இருந்து மீட்கப்பட்டுத் திரும்பிய பெண் தனது குழந்தையுடன்| படம்: துளசி கக்கட்.
மகாராஷ்டிரா சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா, மத்திய இணை அமைச்சர்கள் உள்ளிட்ட குழு மீட்கப்பட்ட இந்தியர்களை மும்பை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
மும்பை மற்றும் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த இந்தியர்கள் அனைவரையும் அவர்களது சொந்த மாநிலத்துக்கு செல்வதற்கான இலவச ஏற்பாட்டை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
போர் சூழலில் மோசமான நிலையில் இருக்கும் ஏமனிலிருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு வரும் 'ஆபரேஷன் ரஹத்'-ன் முதல் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்துள்ளது. ஆனால் மீட்பு நடவடிக்கை மிகவும் சிக்கலானதாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"தப்பித்து வந்தவர்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லாமல் போனதும். அவர்கள் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததும் மீட்பு பணியை சிரமப்படுத்தியது" என்று ஐ.ஏ.எஃப். விமானத்தின் துணை விமானி விக்ரம் அபி தெரிவித்தார்.
ஏமனில் இருந்து மீட்கப்பட்டு கொச்சி விமான நிலையம் வந்த கேரள மாநிலத்தவர்| படம்: துளசி கக்கட்.
மும்பை மற்றும் கொச்சிக்கு வந்தடைந்த 350 பயணிகளில் 206 பேர் கேரளாவையும் 40 பேர், தமிழகத்தையும் 31 பேர் மகாராஷ்டிரத்தையும் 23 மேற்கு வங்கத்தையும் 22 டெல்லியையும் மற்றவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.