

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் பதவி யேற்றது முதல் 37 முறை திருப்பதிக்குப் பயணம் செய்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். இதற்காக அரசின் பணம் ரூ. 4 கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டவர் ஈ.எஸ்.எல். நரசிம்மன். வரும் 16-ம் தேதி பிரதமர் மோடி வெளி நாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கு முன்பாக, காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட 9 மாநிலங்களின் ஆளுநர் கள் மாற்றப் படலாம் எனக் கூறப்படு கிறது. எனவே, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநரான நரசிம்மன் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி ஆளுநரான நரசிம்மன், திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர். இவர் தான் பதவியேற்ற பிறகு மட்டும் 37 முறை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். ஆந்திர ஆளுநர்களாக இருந்தவர்களிலேயே அதிக முறை திருப்பதி கோயிலுக்குச் சென்றவர் இவர்தான்.
ஆளுநர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. எனவே, நரசிம்மன் திருப்பதிக்கு வரும்போதெல்லாம் குண்டு துளைக்காத 3 கார்கள், போலீஸ் பாதுகாப்பு, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், மருத் துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடனிருப்பர்.
இந்நிலையில், இசட், இசட் பிளஸ் பிரிவில் உள்ள விவிஐபிகள் திருப்பதி வருவதால் அரசு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: முதல்வர் பதவியில் இருப்பவர்கள் வந்தால், சுமார் ரூ.30 லட்சம் முதல் 70 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஆளுநர் பதவியில் உள்ளவர்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் இதுவரை திருமலைக்கு 37 முறை வந்துள்ளார். அந்த வகையில் சுமார் ரூ.3.70 கோடி அவரின் வருகைக்காக செலவிடப்பட்டுள்ளது.
ஆளுநர் நரசிம்மன் தன்னுடன் தனது குடும்பத்தினர், ராஜ்பவன் அதிகாரிகள் என குறைந்தது 5 பேரை அழைத்து வருகிறார். ஹைதராபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் திருப்பதிக்கு 5 பேர் சென்று வர (எக்ஸிகியூட்டிவ் கிளாஸ்) டிக்கெட் விலை ரூ.72 ஆயிரம். இதுவரை 37 முறை வந்துள்ளதால் சுமார் ரூ.26.6 லட்சம் செலவாகியுள்ளது. ஆக ஆளுநர் நரசிம்மனின் திருப்பதி தரிசனங்களுக்காக மட்டும் ஆந்திர அரசு சுமார் ரூ.4 கோடிக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.