அரசியல் பின்னணியும் செம்மர என்கவுன்ட்டர்களும்.. - கடந்த கால நிகழ்வுகளில் வெளிப்படும் அதிர்ச்சிகள்

அரசியல் பின்னணியும் செம்மர என்கவுன்ட்டர்களும்.. - கடந்த கால நிகழ்வுகளில் வெளிப்படும் அதிர்ச்சிகள்
Updated on
2 min read

ஆந்திர மாநிலத்தில் 20 ‘கடத்தல்காரர்கள்’ சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, இந்த சட்டவிரோத தொழிலை தொடர்ந்து அறிந்து வைத்திருப்பவர்களுக்கு வியப்பான விஷயம் அல்ல. கடந்த 2011-ம் ஆண்டு முதல் இச்சம்பவத்துக்கு முன்புவரை இதுபோன்ற என்கவுன்ட் டர்கள், நடவடிக்கைகளால் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்; 2,000 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே தமிழக மரக்கடத்தல் மாபியாக்களால் கூலிக்கு அமர்த்தப்பட்ட, மரம் வெட்டும் பழங் குடியின தொழிலாளர்கள்தான்.

சீர்மரபினர் மனித உரிமைகளுக்கான தேசிய இயக்கத்தின் (என்சிடிஎன்டி ஹெச்ஆர்) தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு பல்வேறு அமைப்புகள் இதுபோன்ற கொலைகள், தடுப்புக்காவல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தன. அதில், ஆந்திர அரசியல் சூழல்களுக்கும், செம்மரக் கடத்தல் என்கவுன்ட்டர்களுக்கும் தொடர்பு இருப்பதை ஊகிக்க முடிகிறது. செம் மரக்கடத்தலில் தங்கள் தரப்பை வலுப்படுத்திக் கொள்ளவும் தொழில் போட்டியாளர்களை பலவீனப்படுத்தவும் அரசு இயந்திரத்தை செல்வாக்கு மிக்க கடத்தல் கும்பல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

இந்த சூழ்ச்சிகளில் பலியானவர்கள் அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர் கள்தான்.

* கைது செய்யப்படும் செல்வாக்கு மிக்க உள்ளூர் கடத்தல்காரர்கள் ராஜமுந்திரி மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவர். எனவே அவர்களுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்கும். பெரும்பான்மையாக உள்ள ஏழை பழங்குடியின மரம் வெட்டும் தொழிலாளர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

* மாறும் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்து கடத்தல் கும்பலின் அதிர்ஷ்டம் இருக்கும். அன்றைய சூழலில் எந்த கடத்தல் கும்பல் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அந்தக் கும்பல் தனது தொழில் போட்டிக் கும்பலை அழிப்பதற்காக, அக்கும்பலின் ஆதார பலமான செம்மரம் வெட்டும் மற்றும் சுமந்து செல்லும் தொழிலாளர்களை சிறப்பு அதிரடிப்படையினர் மூலம் கொன்றழித்துவிடும். அப்படிக் கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் தமிழக பழங்குடியினர்.

இதுதொடர்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த சீர்மரபினர் மனித உரிமை களுக்கான தேசிய இயக்க அமைப்பாளர் எம்.சுப்பா ராவ் கூறும்போது, “இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும் பான்மையானவர்கள், சமூகத்தில் மிகவும் அடிமட்டத்திலுள்ள, குற்றப் பரம்பரையிலிருந்து நீக்கப்பட்ட சீர்மரபினரான வன்னியர்தான். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் மற்ற பழங்குடியினர். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இன்னும் 300 பேர் ஆந்திர சிறைகளில்தான் உள்ளனர்” என்றார்.

கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின் நடந்த என்கவுன்ட்டர்களையும், அன்றைய அரசியல் சூழ்நிலைகளையும் பார்க்கும் போது அது உண்மையென்றுதான் தோன்றுகிறது.

* 2011-ம் ஆண்டு ஆந்திர வனத்துறை அமைச்சராக பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி இருந்தபோது தமிழக தொழிலாளி வாராடி என்பவர் போலி என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

* பெத்திரெட்டி 2012 நவம்பரில் ராஜினாமா செய்த பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி முருகன் 2012 டிசம்பரில் கொல்லப் பட்டார்.

* 2014 ஜனவரியில் முதல்வர் பதவியிலிருந்து கிரண் குமார் ரெட்டி விலகுவதற்கு முன்பாக தமிழக தொழிலாளி சம்பரியான் மணி கொல்லப்பட்டார்.

* 2014 மே மாதம் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்பதற்கு சில நாட்கள் முன்பு, விஜயகாந்த், வெங்கடேஷ், சிவா ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருமே தமிழகத்தின் ஜவ்வாது மலைப் பகுதியைச் சேர்ந்த சீர்மரபினர் மற்றும் அண்டை வீடுகளில் வசித்து வந்தவர்கள்.

* 2014 ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சித்தூர் மற்றும் கடப்பா மாவட்ட வனப்பகுதிகளில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

* சுமார் 2,000 தமிழர்கள் கைது செய்யப்பட்டு கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டு நெல்லூர், சித்தூர், கடப்பா மாவட்டங்களில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து பிடிக்கப்பட்டவர்கள் அல்ல. பெரும்பாலும் ரயில்நிலையங் களிலிருந்தும், பேருந்து நிலையங்களி லிருந்தும் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டவர்கள். இவர்களில் 2 பேர் இறந்து விட்டனர்.

* கடந்த ஆண்டு நெல்லூர் சிறையில் செம்மரக் கடத்தல் வழக்கில் 440 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 236 பேர் மீது கொலை வழக்கும் மற்றவர்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சீர்மரபினர் மனித உரிமைகளுக்கான தேசிய இயக்கத்தின் தமிழக அமைப்பாளர் எஸ்.அண்ணாதுரை கூறும்போது, “இந்த பழங்குடியின மரம் வெட்டும் தொழிலாளர்கள் தமிழகத்தின் திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, விழுப்பும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பாரம்பரியமாக காபி தோட்டங்களிலும் கரும்பு வயல்களிலும் பணிபுரிந்தவர்கள். செம்மரக்கடத்தல்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களால் ஆசை காட்டப்பட்டு செம்மரம் வெட்டும் தொழிலுக்கு வந்தவர்கள்.

இந்தக் கொலைகள் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

நான்கு படிநிலைகள்

2014-ம் ஆண்டு அறிக்கையின்படி, செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நான்கு மட்டங்களில் செயல்படுகின்றனர். பழங்குடியின மரம் வெட்டும் தொழிலாளர்களும், மரம் சுமக்கும், ஏற்றும் உள்ளூர்த் தொழிலாளர்களும் கீழ்மட்டத்தில் பணிபுரிகின்றனர். வனம் மற்றும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் அவற்றை போக்குவரத்து மூலம் இடம்மாற்றுபவர்கள் இரண்டாம் நிலையில் செயல்படுகின்றனர்.

அடுத்து மூன்றாம் நிலையில், செம்மரங்களை இந்தியாவுக்கு வெளியே கடத்துபவர் இருப்பார்.

கடைசியாக நான்காம் நிலையில் இருப்பவர் மேலாளர். கூலிக்கு ஆள் அமர்த்துவது முதல், பேரம் பேசுவது, அரசியல் முக்கியஸ்தருக்கு அறிக்கை அளிப்பது வரை அனைத்தையும் இவர்தான் கண்காணிப்பார்.

சராசரியாக 200 கிலோ எடையுள்ள ஒரு மரத்தை வெட்ட, தொழிலாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும். அதுவே அதிகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in