

டெல்லி ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் நிறுத்தப் பட்டிருந்த 2 ராஜ்தானி விரைவு ரயில்களின் 6 பெட்டிகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடக்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
புவனேஸ்வர் மற்றும் சீல்டா ராஜ்தானி விரைவு ரயில்களின் காலி பெட்டிகள், பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிக்காக டெல்லி ரயில் நிலைய பணி மனையில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் பிற்பகல் 12.15 மணியளவில் இந்த ரயில்களின் சில பெட்டிகளில் திடீரென தீப் பிடித்தது. இந்தத் தீ 6 பெட்டி களுக்கும் மளமளவென பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த டெல்லி தீயணைப்புத் துறை, 20 தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் 6 பெட்டிகளும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தையடுத்து முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் டெல்லி ரயில் நிலை யத்தை நோக்கி வந்த ரயில்கள் பாதி வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் படிப் படியாக ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நீரஜ் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புவனேஸ்வர் ராஜ்தானி ரயிலின் 2 ஏ.சி. பெட்டிகளில் முதலில் தீப்பிடித்தது. பின்னர் அருகில் இருந்த சீல்டா ராஜ்தானி ரயிலின் 4 பெட்டிகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் தீப்பிடித்த பெட்டிகளுடனான இணைப்பை துண்டித்ததால், மற்ற பெட்டிகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக இந்த 2 ரயில்களின் புறப்படும் நேரமும் மாற்றி அமைக் கப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து உயர் நிலை விசாரணைக்கு வடக்கு ரயில்வே பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.