

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளது. அங்கு நிலஅதிர்வுகள் தொடர்வதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெட்டவெளியில் தங்கியுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 25-ம் தேதி காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன.
அந்த நாட்டில் தொடர்ந்து நிலஅதிர்வுகள் நீடித்து வருகின்றன. நேற்று இரவு ஏற்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அலகில் 5.4 ஆக பதிவானது. இதுவரை 55 தடவைக்கும் அதிகமாக நிலஅதிர்வு ஏற்பட்டிருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 25-ம் தேதி நிலநடுக் கத்தின்போது அடுக்குமாடி குடி யிருப்புகள், வீடுகள் சீட்டுக்கட்டு போல சரிந்து நொறுங்கின. தற்போதும் பூமி குலுங்கி கொண்டே இருப்பதால் பொது மக்கள் வீடுகளுக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.
இதனால் தலைநகர் காத்மாண்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்லாயிரக் கணக்கான மக்கள் வெட்ட வெளிகளில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.
மீட்புப் பணிகள் தீவிரம்
கட்டிட இடிபாடுகளில் நூற்றுக் கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர் களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாட்களாக கனமழை பெய்த தால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்று காலை வானிலை சீரானதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா சார்பில் விமானப் படை யைச் சேர்ந்த 13 விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளன. இந்தியாவில் இருந்து நேற்று 50 டன் தண்ணீர், மருந்து, உணவுப் பொருட்கள் நேபாளத் துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
சாலை, தெருக்களில் சிகிச்சை
நிலநடுக்கத்தில் இதுவரை 4 ஆயிரம் பேர் உயிரிழந்திருப் பதாகவும் ஏழு ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் காயமடைந் திருப்பதாகவும் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டில் அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. காயமடைந் தவர்களுக்கு தெருக்கள், சாலைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொலைபேசி சேவை, மின் விநியோகம் ஆகியன கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் 60 சதவீத பகுதிகள் இருளில் மூழ்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேபாளத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்த இந்தியக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை உயரும்
நிலநடுக்கத்தால் நேபாளத்தின் உட்பகுதிகள் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளன. ஆனால் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் படையினர் அங்கு செல்ல முடியவில்லை.
இதுகுறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, மேற்கு நேபாளத்தின் மலைப் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வீடுகள் அனைத்தும் அழிந்துவிட்டன என்று தெரிவித்தார்.
லாங்டாங் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, பள்ளத்தாக்கு பகுதியைச் சுற்றிய அனைத்து கிராமங்களும் மண்ணில் புதைந்துவிட்டன என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
அந்தப் பகுதிகளில் உயிரிழப்பு கணக்கிடப்படவில்லை. அவற்றை யும் சேர்த்தால் பலி எண்ணிக்கை பலமடங்கு உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விமான நிலையத்தில் குழப்பம்
நேபாள தலைநகர் காத்மாண்டில் மட்டுமே சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் ஆயிரக் கணக்கானோர் காத்திருக் கின்றனர். எனவே முதல்கட்டமாக பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கூட்டம் அலைமோதுவதால் காத்மாண்டு விமான நிலையத்தில் கூச்சல் குழப்பம் நீடிக்கிறது.
அங்கிருந்து நேற்றுமுன்தினம் 2500 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சாலை வழியாக மீட்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
150 பேர் தவிப்பு
நிலநடுக்கத்தின்போது எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு 19 பேர் உயிரிழந்தனர். அந்த சிகரத்தில் தற்போது 150-க்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். அவர்கள் ஹெலி காப்டர் மூலம் மீட்கப்படுவார்கள் என்று நேபாள அரசு உறுதிய ளித்துள்ளது.