Last Updated : 26 Apr, 2015 10:04 AM

 

Published : 26 Apr 2015 10:04 AM
Last Updated : 26 Apr 2015 10:04 AM

நேபாளத்தில் நிலநடுக்கம்: பேரிடர் மேலாண்மை குறித்து டெல்லியில் அவசரக் கூட்டம்

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் சில பகுதிகளில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நேற்று மாலை டெல்லி ஆளுநர் நஜீப் ஜங் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.

இதில் டெல்லி உள்துறை செயலர், பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், காவல்துறை இணை ஆணையர்கள், நகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து நஜீப் ஜங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் அங்கு உயிரிழப்புகளோ அல்லது பெருமளவில் பொருட்சேதங்களோ ஏற்படவில்லை என்று தொடக்க நிலைத் தகவல் கூறப்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. அதன் காரணமாக சில கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மற்றபடி, பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில் டெல்லி பகுதி நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். ஒருவேளை ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பதற்கு காவல்துறை, மருத்துவமனை மற்றும் தீயணைப்புப் படைகள் தயாராக இருக்கின்றன. மேலும் தன்னார்வலர்கள் பலர் நகரின் முக்கியப் பகுதிகளில் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்தச் சமயத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். நிலைமையை ஆராய்வதற்கு அதிகாரிகள் களத்தில் உள்ளனர்" என்றார். நில அதிர்வுகள் உணரப்பட்டதன் காரணமாக, டெல்லி மெட்ரோ ரயில்கள் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டதால் ரயில் சேவை தாமதமாகியது.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x