

தெலங்கானாவுக்காக உயிர் தியாகம் செய்த குடும்பத்தினர், சீட் கேட்டு நச்சரிப்பதும், சீட் தரவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டுவதும் ஆந்திர அரசியல் கட்சிகளுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல கட்சி தலைவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
தனி தெலங்கானா மாநிலத் துக்காக கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இதில் பலர் மாணவர்கள். இதேபோன்று ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் எதிர்பாராதவிதமாக இறந்தபோதும் 120-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர்.
இவர்களுக்காக ஜெகன் மோகன் ரெட்டி, ஆறுதல் யாத்திரை மேற்கொண்டு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு உதவிகள் செய்தார். இதன் மூலம் ஆந்திராவில் அவரது அரசியல் செல்வாக்கு உயர்ந்ததாக அவரது கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் வரும் ஜூன் 2-ம் தேதி அதிகாரபூர்வமாக உருவாக உள்ளது. இதனிடையே, மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தெலங்கானா மாநிலத்திற்காக உயிர் தியாகம் செய்த குடும்பத்தினர், தேர்தலில் போட்டியிட தங்களுக்கு சீட் வழங்க வேண்டும் என பிடிவாதம் பிடித்து வருகின்றனர். ஹைதராபாத் உஸ்மானியா பல்கலையில் படித்துவந்த மாணவர் கே. ஸ்ரீகாந்த் சாரி, தனி தெலங்கானா மாநிலம் வழங்க வலியுறுத்தி, 2009-ம் ஆண்டு, தற்கொலை செய்து கொண்டார்.
இப்போது இவரது தாயார் சங்கரம்மாள், தனக்கு நலகொண்டா மாவட்டத்தில் உள்ள பாலகுர்த்தி தொகுதியில் போட்டியிட சீட் வழங்க வேண்டும் என தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவை வலியுறுத்தி வருகிறார். தொகுதி வழங்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். எம்.எல்.சி, பதவி வழங்குவதாக சந்திரசேகர ராவ் சமாதானப்படுத்தினாலும், சங்கரம்மாள் சமாதானம் அடைய வில்லை.
இதேபோன்று வாரங்கலில், கொண்டல பிரேம் சாகர் எனும் டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர், கடந்த 18ம் தேதி தீக்குளித்தார். இவர் தனது அரசியல் தலைவர் வித்யா சாகர் ரெட்டிக்கு இந்த தேர்தலில் மேற்கு வாரங்கல் தொகுதியில் போட்டியிட சீட் வழங்க வேண்டும் என தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் கொண்டா சுரேகா மற்றும் அவரது கணவர் கொண்டா முரளி ஆகியோரை டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்க்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிஜாமாபாத் மாவட்டம் காமா ரெட்டி தொகுதி டி.ஆர்.எஸ். கட்சி பிரமுகர் சுரேந்திர ரெட்டியின் ஆதரவாளர் சாய் குமார். இவர், சுரேந்திர ரெட்டிக்கு சீட் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அனந்தபூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி தலைவர் ஏ. முரளி பிரசாத் ரெட்டி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜே.சி. திவாகர் ரெட்டியை தெலுங்கு தேசம் கட்சியில் சேர்க்க கூடாது என வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியையும் இந்த தற்கொலை தொல்லை விட்டு வைக்கவில்லை. கம்மம் நகராட்சியில் கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஸ்ரீதேவி என்பவர் கடந்த 18-ம் தேதி விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே மாவட்டத்தில், அங்கி ராஜு சங்கர் என்பரும் காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலராக தனது மனைவி போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது போன்ற தற்கொலை மிரட்டல்களால் ஆந்திர அரசியல் கட்சி தலைவர்கள் மிரண்டு போயுள்ளனர்.