

காஷ்மீரில் வடக்குப் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் போலீஸ்காரர், ராணுவ வீரர் என இருவர் பலியானார், பொதுமக்களில் ஒருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "பாரமுல்லா மாவட்டம் டங்மார்க் பகுதியில் உள்ள குன்சர் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து குன்சர் கிராமத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது ஒரு வீட்டினுள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இரு தரப்பினரும் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். 2 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தீவிரவாதிகளுடனான சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பொதுமக்களில் ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்தனர். தொடையில் குண்டு பாய்ந்து காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவரும் இறந்தார்" என்றார்.