

ஊழலை கடும் குற்றமாகக் கருதும் வகையில் ஊழல் தடுப்பு சட்டத்தைத் திருத்துவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் ஊழல் செய்வோருக்கான சிறை தண்டனை 5-லிருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கும்.
நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம்:
வருங்கால வைப்பு நிதித் திட்டத் தின் (பிஎப்) கீழ் சந்தாதாரர்கள் ஓய்வுபெற்ற பிறகு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,000 தொடர்ந்து வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் 20 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள்.
குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப் பட்டு வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வனமயமாக்கல் இழப்பீடு
வனமயமாக்கல் இழப்பீடு நிதி மசோதாவுக்கு மத்திய அமைச் சரவை நேற்று ஒப்புதல் வழங்கி யது. வன நிலங்களை வனம் சாரா நோக்கங்களுக்காக பயன்படுத்து வதற்கு இழப்பீடாக தரப்படும் நிதியை விரைவாக பயன்படுத்த இந்த மசோதா வழிவகை செய்கி றது. இந்த நிதியில் செலாவாகா மல் உள்ள நிதியை செலவு செய்ய இந்த உத்தேச சட்டம் துணை புரியும்.
ஊழலை கடும் குற்றமாகக் கருதும் வகையில் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி ஊழல் புரிவோருக்கு குறைந்தபட்சமாக 3 ஆண்டுகளும் அதிகபட்சமாக 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். தற்போது குறைந்தபட்ச தண்டனை 6 மாதங்களாகவும் அதிகபட்ச தண்டனை 5 ஆண்டுகளாகவும் உள்ளது.
மேலும் லஞ்சம் கொடுப்பது, லஞ்சம் வாங்குவது ஆகியவற்றை யும் குற்றமாகக் கருத இந்த மசோதா வகை செய்யும். அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள அதிகார பூர்வ திருத்தங்கள் தற்போது மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள ஊழல் ஒழிப்பு சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்படும்.
தேசிய பேரிடர் மீட்புப் படையில் (என்டிஆர்எப்) புதிதாக 2 அணிகளை சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்த படை மேலும் வலுப்பெறும். புதிய அணிகளில் மொத்தம் 2,000 வீரர்கள் இடம்பெறுவார்கள்.
தற்போது இந்தப் படையில் 10 அணிகள் உள்ளன. புதிய அணிகள் வாராணசி, அருணாசல பிரதேசத்தில் நிறுவப்படும். தற் போது குவாஹாட்டி (அசாம்) கொல்கத்தா (மேற்குவங்கம்), கட்டாக் (ஒடிசா), வேலூர் (தமிழ் நாடு), புனே (மகாராஷ்டிரா), காந்திநகர் (குஜராத்) பதிண்டா (பஞ்சாப்), காசியாபாத் (உத்தரப் பிரதேசம்), பாட்னா (பிஹார்), விஜயவாடா (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ளன.
100 ஸ்மார்ட் சிட்டி
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்துக் கும் ஒப்பதல் வழங்கியது.