தீவிரவாதிகளை தனிமைப்படுத்துங்கள்: உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு

தீவிரவாதிகளை தனிமைப்படுத்துங்கள்: உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு
Updated on
1 min read

தீவிரவாதிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் தனிமைப்படுத்த வேண்டுமென்று உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பெர்லினில் நேற்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: முன்பு நாம் தீவிரவாதத்தைப் பற்றி பேசியபோது அதை சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாகவே பொதுவாக மக்கள் கருதினார். ஆனால், இப்போது அது மனித சமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம்.

எனவே, தீவிரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் முற்றிலுமாக தனிமைப்படுத்த வேண்டும் என்றார்.

மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வியை சமீபத்தில் ஜாமீனில் விடுவித்த பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டிப் பேசிய மோடி, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளுக்கு நாம் நெருக்கடி அளிக்க வேண்டும். அணு ஆயுதங்கள் தயாரிப்பு கூடாது என்பதில் உலக நாடுகள் எவ்வளவு தீவிரமாக உள்ளனவோ, அதேபோன்ற தீவிரத்தை தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும். தீவிரவாதிகள் வளர்வது என்பது அணு ஆயுத உற்பத்தி போன்று உலகுக்கே பெரிய கேடுகளை விளை விக்கும்.

தீவிரவாதம் என்பது என்ன என்பதை வரையறை செய்யும் நடவடிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. தீவிரவாதம் என்பது என்ன என்பதை வரையறை செய்து ஐ.நா. தீர்மானம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் நாம் தீவிரவாதத்துக்கு எதிராக மக்களை எளிதாக ஒன்று திரட்ட முடியும். தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைதான் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் கொண்டுள்ளார்.

ஐ.நா.வில் நிரந்தர இடம்

கவுதம புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த இந்தியாவின் மரபணுவிலேயே அமைதியும், சகிப்புத்தன்மையும் கலந்துள்ளன. இந்தியா இதுவரை எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது இல்லை. எனினும் ஐ.நா. சபை தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவுள்ள நிலையில், அதன் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. இதற்கு நீதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் மோடி.

“தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியாவும், ஜெர்மனியும் இணைந்து செயல்படுவதென முடிவு செய்துள்ளோம். எதிர் காலத்தில் இணைய மூலமாகவும், வான் வழியாகவும் தீவிரவாதத் தாக்குதல் அதிகரிக்கும். அதனை எதிர்த்து ஒடுக்க இருநாடுகளும் ஒத்துழைக்கும்” என்று ஏஞ்சலா மெர்க்கல் கூறினார். 3 நாள் ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்ட மோடி நேற்று கனடா புறப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in