

ஒசூர் அருகே மது குடித்துவிட்டு டிரைவர், லாரியை தாறுமாறாக ஓட்டி தொடர் விபத்துகளை ஏற்படுத்தியதில் 4 பேர் இறந்தனர். 20 வாகனங்கள் சேதமடைந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்தில் புதன்கிழமை காலை கன்டெய்னர் லாரி ஒன்று உதரிபாகங்களை இறக்கிவிட்டு, பெங்களூருக்குப் புறப்பட்டது.
இந்த லாரி ஒசூரை அடுத்துள்ள சர்ஜாப்பூர் சாலையில், அத்திப்பள்ளி பகுதியில் தாறுமாறாக செல்லத் தொடங்கியது. இதில் சாலையில் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் பாரதி ரெட்டி (50), பாபு (42) உள்ளிட்ட 4 பேர் அதே இடத்தில் இறந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த லாரி பொதுமக்கள் மீது மோதியதுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த 12 இருசக்கர வாகனங்கள், 7 கார்கள், ஒரு லாரி என 20 வாகனங்கள் மீதும் மோதிச் சென்றது. தொடர்ந்து விபத்து ஏற்படுத்திச் சென்றதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உருவானது.
சிறிது தூரம் சென்றதும் லாரி கவிழ்ந்தது. டிரைவரை மக்கள் பிடித்தனர். லாரியின் டிரைவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரிக்கும் தீ வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெங்களூர் மாநகர போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் வேகமாக செயல்பட்டு லாரியின் தீயை அணைத்தனர். மேலும் லாரி டிரைவரை அவர்களிடம் இருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.