Published : 07 Apr 2015 04:37 PM
Last Updated : 07 Apr 2015 04:37 PM

சல்மான் கான் ஓட்டுநர் வாக்குமூலத்துக்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர் சரமாரி கேள்வி

சல்மான் கான் ஓட்டுநர் அசோக் சிங் அளித்த வாக்குமூலத்தில் உள்ள ஓட்டைகளை அரசு தரப்பு வழக்கறிஞர் பிரதீப் காரத் நீதிமன்றத்தில் காரசாரமாக வாதிட்டார்.

சல்மான் கான் ஓட்டுநர் விபத்து நடந்த அன்று கார் ஓட்டியது நான் தான் என்று வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரது வாக்குமூலத்தை கறாராக அலசிய அரசு வழக்கறிஞர் பிரதீப் காரத், ஓட்டுநரின் வாக்குமூலமும் அவரது நடத்தையும், ‘இயல்பானதாகவும் இல்லை ஏற்கக் கூடியதாகவும் இல்லை’ என்று வாதிட்டார்.

"சல்மான் கான் ஓட்டுநர் அசோக் சிங் ஒரு பொய்யர். என்ன காரணங்களுக்காகவோ அவர் குற்றம்சாட்டப்பட்டவரைக் காப்பாற்ற முன்வந்துள்ளார். உண்மை பேசுவதாக சத்தியம் செய்து விட்டு அவர் நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பின் படி விபத்து கடவுளின் செயல், ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டது கடவுளின் செயல். ஓட்டுதல் என்பது அறிவின் செயல்.

இந்த 12 ஆண்டுகாலமும் அவர் அமைதியின்மையில் உழலவில்லை. இந்த 12 ஆண்டு காலமும் சல்மான் மீது தவறு இருப்பதாகவே அவர் கருதி வந்துள்ளார். ஆனாலும் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நபரையோ, அல்லது வழக்கறிஞரையோ சந்திக்கவில்லை. இது இயல்பான, ஏற்றுக் கொள்ளக்கூடிய நடத்தையா?

நீதிமன்றத்தில் தான் எப்போது ஆஜராக வேண்டும் என்று தனக்கு ஒருவரும் தெரிவிக்கவில்லை என்கிறார், நீதிமன்ற நடைமுறைகளை அவர் அறியவில்லை என்று கூறுகிறார் என்றால் நமக்கு ஏற்படும் கேள்வி இதுதான், 'அவர் எப்படி சரியான தேதியில் நீதிமன்றத்தில் ஆஜரானார்?'

குற்றம்சாட்டப்பட்டவர் (சல்மான் கான்) 12 ஆண்டுகளாக வழக்கைச் சந்தித்து வருகிறார். கைது நடவடிக்கையை முதன்முதலாக எதிர்கொண்டார். சில நாட்கள் காவலிலும் வைக்கப்பட்டார். ஒரு நடிகர் தனது மதிப்புமிக்க காலத்தை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததிலிருந்து கோர்ட்டில் செலவிடுகிறார். இதே ஓட்டுநர அவருடன் பணியாற்றியுள்ளார், தொடர்ந்து பணியாற்றியும் வருகிறார்.. இந்தக் காலக்கட்டத்தில் வாயை மூடிக்கொண்டு கைகளை கட்டிக் கொண்டு இருந்துள்ளார்?

கார் வழுக்கிச் சென்று விட்டது என்ற குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு சாட்சியம் வெறும் கண் துடைப்பு. அந்த எஸ்.யு.வி. காரின் டயர்கள் மற்ற கார்களின் டயரை விட உயர்தரமானது, அகலம் அதிகமுள்ளது. அது, சேறு, சகதி மற்றும் கரடுமுரடான சாலைகளிலும் நன்றாக ஓடக்கூடியதே. எனவே டயர் வழுக்கிச் சென்றது என்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. மேலும் டயர் பஞ்சர் ஆகவும் வாய்ப்பு மிகக் குறைவு, இதற்கான சிறந்த காரணங்கள் உள்ளன. ஓடும் நிலையில் பஞ்சர் ஆனாலும் டயர்கள் ஒரு போதும் வெடிக்காது.

விபத்துக்கு பிறகு காரின் அடியில் ஒருவரும் இல்லை என்று கூறுகிறார் அசோக் சிங். இதுவே அவர் ஒரு பொய்யர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. டயரில் பாதிக்கப்பட்டோரின் உடல் உறுப்புகள் சிக்கியிருந்ததாக அனைத்து சாட்சியங்களும் கூறியுள்ளன. ஏன் அவரே கூட, காரை அவரும் சல்மானும் தூக்கியதாக தெரிவித்திருக்கிறார். டயரின் கீழ் ஒருவரும் இல்லையெனில் காரை எதற்காகத் தூக்க வேண்டும்?"

என்று அரசு தரப்பு வழக்கறிஞர் காரத் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, கோர்ட்டில் ஆஜராவதற்கு விலக்கு கோரிய சல்மான் கானின் மனுவை கோர்ட் நிராகரித்தது. அரசுதரப்ப்பு வாதங்கள் இறுதியடையும் வரை சல்மான் கோர்ட்டில் இருப்பது அவசியம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் விலக்குக்கு ஆட்சேபம் தெரிவித்ததால் சல்மான் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x