

ஒடிஸா மாநிலத்தில் மத ஊர்வலத்தின் போது வாள் ஏந்திய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜெயநாராயண் மிஸ்ராவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை ஒடிஸாவில் ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது நடந்த ஊர்வலத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான மிஸ்ரா வாள் ஏந்தியபடி சென்றார்.
இவ்வாறு, மத ஊர்வலத்தில் அமைதியைக் கெடுக்கும் வகையில் வாள் ஏந்துவதற்கு சட்டப் பிரிவு 144ன் கீழ் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தத் தடையை மீறி மிஸ்ரா வாள் ஏந்தியதால் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது இரண்டு இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் தனித்தனியாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் நேற்று தன் வீட்டில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் கைது செய்யப்பட்டிருப்பது ஓர் அரசியல் சதியாகும்" என்றார். அவர் விரைவில் நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.