

முத்ரா வங்கியைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, கன மழை, புயல் காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடு உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
சிறிய தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சம் வரையில் கடன் கொடுக்க வழிவகுக்கும் முத்ரா வங்கியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார்.
இந்த வங்கிக்கான வழிகாட்டு முறைகளும், அதாவது எத்தகையோருக்கு கடன் கிடைக்கும் என்பதற்கான கொள்கை விளக்கமும் வெளியிடப்பட்டது.
முத்ரா வங்கியின் முதலாவது கிளையை டெல்லியில் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டிலுள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் 1.25 கோடி மக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை அளிக்கின்றன. சிறு தொழில் நிறுவனங்கள் சுமார் 12 கோடி மக்களை பணியில் அமர்த்தியுள்ளன.
பயிர் சேத இழப்பீடு உயர்வு
நிதி கிடைக்கப்பெறாத சிறு தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு முத்ரா வங்கி செயல்படும். நம் நாட்டில் சேமிப்புப் பழக்கத்தை வலுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இயற்கைச் சீற்றத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மழை குறைவு காரணமாகவும், இந்த ஆண்டு காலம் தவறிய மழை வெள்ளத்தாலும் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு அமைச்சர்கள் நேரடிப் பணிகளை மேற்கொள்வர்.
50 சதவீத பயிர் சேதத்துக்கு இழப்பீடு என்பதை 33 சதவீதமாக குறைக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு கிடைக்கும்.
மேலும், பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒன்றரை மடங்காக உயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முன்பு ரூ.100 இழப்பீடு பெற்றவர்களுக்கு இனி ரூ.150 கிடைக்கும்; முன்பு ரூ.1 லட்சம் பெற்றிருந்தால், இப்போது ரூ.1.5 லட்சம் கிடைக்கும். அதாவது இழப்பீடு 50 சதவீதம் உயர்த்தப்படுகிறது" என்றார் பிரதமர் மோடி.
முத்ரா வங்கி குறித்து...
முத்ரா வங்கி குறித்த அறிவிப்பை நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார். தொடக்கத்தில் சிட்பி வங்கியின் துணை அமைப்பாக இந்த முத்ரா வங்கி தொடங்கப்படுகிறது.
நாட்டில் மொத்தம் 5.77 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படாமல் நியாயமான வட்டி கிடைக்க வகை செய்வதற்காக முத்ரா வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிறு, குறு தொழில்கள் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாகத் திகழ்வதால் எளிதில் கடன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்ரா வங்கிக்கு முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி நிதியும், கடன் வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
கடன் உதவித் திட்டங்களுக்கு சிஷு, கிஷோர், தருண் என பெயரிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் திட்டங்கள் சிஷு எனப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்டு ரூ.5 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் கிஷோர் எனப்படும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் தருண் எனப்படும். பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இந்தக் கடன் உதவித் திட்டங்கள் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சலூன், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் பயன் பெறலாம். மகளிர் தொழில் முனைவோரும் இத்திட்டம் மூலம் கடன் பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது.