

மோடியை பாராட்டும் வகையில் 'ஹர ஹர மோடி' என்ற பாஜக தொண்டர்களின் கோஷம் தொடர்பாக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மேயர் ராம் கோபால் மொஹாலே மீது வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனோஜ் துபே என்ற வழக்கறிஞர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், இந்து மதத்தில் சிவனை துதிக்கும் வகையில் ‘ஹர ஹர சங்கரா‘ என்று கூறுவதைப் போல, மோடியை பாராட்டும் வகையில் ‘ஹர ஹர மோடி’ என்று கூறுவது மத உணர்வை புண்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தான் ஏற்கெனவே புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இப்போது வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கெனவே இது தொடர்பாக துவாரகை பீடம் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது: “இந்த விவகாரம் குறித்து தெரிய வந்ததும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை தொடர்பு கொண்டு எனது எதிர்ப்பைத் தெரிவித்தேன். இது போன்று கோஷமிடுவது இறைவன் சிவனை அவமதிப்பது போலாகும். கடவுளை துதிப்பதற்கு பதிலாக தனிமனிதரை துதிப்பது இந்து மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று கூறியிருந்தார்.