

பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு சேவையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தொலைத் தொடர்புத் துறைக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச் சகம் உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் பிஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்களைவிட்டு வெளியில் ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சில மாநிலங்களில் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிலநடுக்கம் காரணமாக பிஹார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தனியார் மற்றும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தொலைத் தொடர்புத் துறை செயலாளர் ராகேஷ் கர்குக்கு மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள தொலைத் தொடர்பு சேவை பாதிப்புகளை மதிப்பிடுமாறும் அதை சரி செய்வதற்கான அவசர திட்டங்களை தயாரிக்குமாறும் இரு மாநில பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.