

ஹைதராபாத்தில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரத்துக்கு ‘அமராவதி’ எனும் பெயரை சூட்ட அமைச்சரவை ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் குண்டூர் மாவட்டம் தூளூரு பகுதியில் அமைய உள்ளது. இந்த பகுதிக்கு 20 கி.மீ தூரத்தில் சரித்திர புகழ் பெற்ற அமராவதி நகரின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரவையில் நடந்த விவாதத்துக்குப் பின்னர் ‘அமராவதி’ பெயரை வைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், தெலங்கானா மாநில அரசு ஆந்திரா வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய தொழிற்சாலைகள் அமைப்பது, சித்தூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகளுக்கு நிலம் வழங்குவது போன்றவைக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒரு மனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ரூ. 100 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் தொழிற்சாலைகளுக்கு 100 சதவீத மானியம் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.