

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக கூட்டம் நடத்திய பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்போது அயோத்தி ராமஜென்மபூமி விவகாரத்தில் விரைவான தீர்வு காண்பது தொடர்பாக பிரதமரிடம் பேசவுள்ளனர்.
இதுகுறித்து விஎச்பி செய்தித் தொடர்பாளர் சரத் ஷர்மா, செய்தியாளர்களிடம் கூறும்போது, “விஎச்பி சார்பில் சாதுக்கள் கூட்டம் ஹரித்துவாரில் வரும் மே 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா உள்ளிட்ட விஎச்பி உயர் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பிரதமரை சந்திக்கும் நாள் முடிவு செய்யப்படும். பிரதமரை சந்திக்கும்போது அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும். அந்த மனுவில் ராமஜென்மபூமி விவகாரத்தை எவ்வாறு தீர்க்கலாம் என பரிந்துரை அளிக்கப்படும்.
இந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என நாங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும் என ராம் ஜென்மபூமி நியாஸ் தலைவர் மகந்த் நிருத்யகோபால் தாஸ் கூறி வருகிறார். இதற்கான முயற்சிகளை பிரதமர் எடுக்கவேண்டும் என வலியுறுத்தவே அவரை சந்திக்கிறோம்” என்றார்.
சரத் ஷர்மா மேலும் கூறும்போது, “கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சாதுக்கள் சந்தித்து பேசினர். அப்போது, முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராமஜென்மபூமி விவகாரம் விரைவாக தீர்க்கப்படுவதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என சங்கர் தயாள் சர்மா கேட்டுக்கொண்டார். இதையடுத்து உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் அயோத்தியில் அகழ்வுப் பணிகள் தொடங்கின.
ராம்ஜென்மபூமி விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சிகள் குறித்து ஹரித்துவார் கூட்டத்தில் சாதுக்கள் விவாதிப்பார்கள்” என்றார்.