Published : 16 May 2014 08:10 AM
Last Updated : 16 May 2014 08:10 AM

88 வயதில் மாப்பிள்ளையானார் என்.டி.திவாரி: முக்கிய விருந்தினராக அவரது 34 வயது மகன்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் ஆளுநருமான 88 வயது என்.டி.திவாரி வியாழக்கிழமை, 67 வயது உஜ்வல் சர்மாவை மணமுடித்து மாப்பிள்ளையானார். உபியில் நடந்த இந்த திருமணத்தில் அவர்களது 34 வயது மகன் ரோஹித் சேகர் முக்கிய விருந்தினராக இருந்தார்.

இந்தத் திருமணம், உபி தலைநகர் லக்னோவின் விஐபிக்கள் வாழும் மால் அவென்யூவில் உள்ள அவரது வீட்டில் எளிமையான முறையில் நடந்தது. இதில் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் முப்பது பேர் மட்டும் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு நடந்த இரவு விருந்தில் செய்தியாளர்களிடம் பேசிய உஜ்வல் சர்மா, ‘‘எங்கள் இருவருக்கும் மகனாக ரோஹித் சேகர் பிறந்தபோது அவனுக்கு பெயர் வைக்க திவாரியை சந்திக்க முயன்றேன். பள்ளியில் சேர்த்தபோதும் தந்தையின் பெயராக திவாரியை குறிப்பிட விரும்பினேன். தனது அரசியல் எதிர்காலம் கருதி அவர் மறுத்ததுடன் சேகரை தாம் தத்துப்பிள்ளையாக ஏற்பதாக உறுதி கூறி இருந்தார்’’ எனத் தெரிவித்தார்.

அதன்படி, அவரை நம்பி இருந்த என்னை இப்போது மணமுடிக்க திவாரியே முடிவு எடுத்ததாகவும் இந்தத் திருமணத்தால் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் உஜ்வல் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2008-ல் ஆந்திர ஆளுநராக இருந்த திவாரி, தனது தந்தை என ரோஹித் சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது பலரும் அதிர்ந்தனர். இதை திவாரி மறுத்து வந்தபோதும், மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜூலை 27, 2012-ல் தம் மகனுடன் சமாதானம் செய்து கொள்வதாக இருவரும் கூறி வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதன் பிறகும், திவாரியை சந்திக்க கடந்த 3-ம் தேதி, அவரது வீட்டு முன் உஜ்வலுக்கு தர்ணா இருக்க வேண்டி வந்தது.

ஏற்கனவே மணமானவரான திவாரியின் முதல் மனைவி சுசிலா தேவி திவாரி, பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இதுபோல் ஏற்கெனவே மணமானவரான உஜ்வல் சர்மாவின் கணவர் விவாகரத்து பெற்று விட்டார். ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சரின் மகளான உஜ்வல் தங்கியிருந்த வீட்டில் திவாரி புதிய எம்பியாக குடியேறினார். அப்போது அரசு வீட்டை காலி செய்யாமல் இருந்த உஜ்வலுக்கும் திவாரிக்கும் இடையே வளர்ந்த காதல், சுமார் 34 வருடங்களுக்கு பின் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் நைனி தாலைச் சேர்ந்தவர் என்.டி.திவாரி. உபியில் காங்கிரஸ் சார்பில் முதல் அமைச்சராக மூன்று முறை இருந்த திவாரி, அதிலிருந்து உத்தரகண்ட் தனியாகப் பிரிந்தபோது நடந்த முதல் சட்டசபை தேர்தலிலும் வென்று முதல்வரானார்.

ஆந்திராவின் ஆளுநர் மாளிகையில் அழகிகளுடன் உல் லாசமாக இருந்ததாக விடீயோவின் ரகசியப் பதிவு வெளியாகி சர்ச்சைக்குள்ளானார். பிறகு உபியில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் விருந்தினராக லக்னோவில் வசித்து வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x