

“நேபாளத்தில் சனிக்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தியா விரைந்து செயல்பட்டது. இந்த நிலநடுக்கம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி எனக்கு முன்னரே அறிந்து விரைவான நடவடிக்கை எடுத்தார்” என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று மக்களவையில் கூறியதாவது:
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் நான் பிரதமருடன் இருந்தேன். நிலநடுக்கம் பற்றிய தகவலை அவர்தான் என்னிடம் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் விரைந்து செயல்படுவதற்கு முன் பிரதமர் செயல்பட்டார்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி உடனடியாக பேசினார்.
நேபாளத்தை ஒட்டியுள்ள மாநிலங்களில் இருந்து பஸ்களை அந்நாட்டுக்கு அனுப்பி அங்குள்ள இந்தியர்களை மீட்டுவர நாங்கள் முடிவு செய்தோம்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் மற்றும் பிஹாருக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேபாளம், இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் அரசு உதவி செய்யும்.
நேபாளத்தில் இருந்து 1,900-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்திய விமானப் படை மீட்டு வந்துள்ளது. இப்பணியில் விமானப் படை தொடர்ந்து ஈடுபடும். நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு சென்றுள்ளது.
நேபாளத்தில் இருந்து மீட்கப்படும் வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அடிப்படையில் விசா வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.