

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் தொடர்பாக உச்சநீதி மன்றம் மாறுபட்ட தீர்ப்பு வெளி யிட்டுள்ளதால், மேல்முறையீட்டு மனு மீதான கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு தாமத மாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படு கிறது.
ஜெயலலிதா, சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக் கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதியுடன் நிறைவடைந் தது. இதையடுத்து நீதிபதி சி.ஆர். குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இவ் வழக்கு விசாரணையில் இருந்த போதே அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜரானது சட்டபடி செல்லாது என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், பானுமதி அடங்கிய அமர்வு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு வழங்க 15-ம் தேதி வரை தடை விதித்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி மதன் பி.லோகுர், 'பவானிசிங் நியமனம் செல்லாது' என்றும் மற்றொரு நீதிபதி பானுமதி, ‘பவானிசிங் நியமனம் செல்லும்' என மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
மேலும் இவ்வழக்கை பெரிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கவும் பரிந்துரை செய் தனர். அதே நேரத்தில் ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு தீர்ப்புக்கு விதிக் கப்பட்ட தடையை நீட்டிக்க வில்லை. எனவே கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமார சாமி தீர்ப்பு வெளியிடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று பெங்களூருவில் குவிந்தனர்.
தாமதம் ஆக வாய்ப்பு
இந்நிலையில் கர்நாடக உயர்நீதி மன்ற நீதித்துறை பதிவாளர் எஸ்.கே.பாட்டீல், ‘‘பவானிசிங் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவரம் இன்னும் எங்களுக்கு தெரியவில்லை. அந்த தீர்ப்பின் நகலை படித்த பிறகுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இருப்பி னும் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க பெரிய அமர்வை அமைத்த பிறகு, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு குறித்த விவரங்கள் தெரி விக்கப்படும்'' என்றார்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கர்நாடக உயர்நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘ஜெயலலிதாவின் மேல்முறை யீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி 90 சதவீதம் எழுதி முடித்து விட்டார். இதனிடையே கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா திடீரென இட மாற்றம் செய்யப்பட்டதால் பணிகளை நிறுத்தி வைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவானிசிங் நியமனம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் முரண்பட்ட தீர்ப்பால் நேற்றும் தீர்ப்பு எழுதும் பணியை மேற்கொள்ளவில்லை.
அதிகாரப்பூர்வமாக அரசு வழக்கறிஞரை அறிவிக்கும் வரை இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படும். ஏனென்றால் சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் அரசு வழக்கறிஞரின் பெயரை குறிப்பிட்டு எழுதப்படும். எனவே பவானிசிங் நியமன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன் றத்தில் உறுதியான தீர்ப்பு வெளி யாகும் வரை, தீர்ப்பு வழங்க முடியாது.
உச்ச நீதிமன்றம் மேல்முறை யீட்டு தீர்ப்புக்கு விதித்த தடையை நீட்டிக்கவில்லை என்றாலும், பவானிசிங் விவகாரத்தில் உரிய முடிவு எட்டப்படாததால் தீர்ப்பு வெளியிடுவதில் சிக்கல் எழுந் துள்ளது. எனவே நீதிபதி குமார சாமி இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்.
பொதுவாக ஒரு வழக்கு தொடர் பான முக்கிய மனு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அந்த வழக் கின் தீர்ப்பை விசாரணை நீதிமன்றம் வெளியிடாது. எனவே ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் தீர்ப்பு வெளியாக தாமதம் ஏற்படும்.
இதுமட்டுமில்லாமல் உச்சநீதி மன்றத்துக்கு மே மாதம் 18-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதிவரை கோடை விடுமுறை விடப் பட்டுள்ளது. இதே போல கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு வருகிற மே மாதம் 4-ம் தேதியில் இருந்து 29-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நீதிமன்றங்களுக்கும் கோடை விடுமுறை இருப்பதால் அதற்குள் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு தீர்ப்பு வெளியாகுமா என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது'' என தெரிவித்தனர்.