

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட் டுள்ள நேபாளத்துக்கு இன்று முதல் தினமும் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை அனுப்பு வது என சீக்கிய மத அமைப்பு களான சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி, டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி ஆகியவை முடிவு செய்துள்ளன.
சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த உதவி அளிக்கப்படுகிறது என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
இதுதவிர இந்த அமைப்புகள் சார்பில் காத்மாண்டுவில் சமுதாய சமையல் கூடம் நிறுவி உணவு விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
100 மாணவர்களுக்கு கல்வி
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 100 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க, குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.
பரூல் ஆரோக்ய சேவா மண்டல் என்ற அறக்கட்டளை சார்பில் வடோதராவில் பரூல் பல்கலைக்கழகம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் அறக்கட்டளையின் தலைவர் ஜெயேஷ் பட்டேல் இத்தகவலை நேற்று தெரிவித்தார். தங்கள் முடிவு குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்கா உதவி
நேபாளத்துக்கு அவசரகால உதவியாக 10 லட்சம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்கா நேற்று அறிவித்தது. மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நேபாள அரசுடன் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.