Published : 30 Apr 2015 08:51 AM
Last Updated : 30 Apr 2015 08:51 AM

இந்தியாவுக்கு வந்திருக்கும் மோடி பஞ்சாபுக்கு சென்று விவசாயிகளின் பிரச்சினையை பார்க்க வேண்டும்: ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி

‘‘பிரதமர் நரேந்திர மோடி தற்போது, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள விவசாயிகளின் பரிதாப நிலையை பார்க்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார். இதனால் மக்களவையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது.

பஞ்சாப் மாநில விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிய 2 நாட்களுக்கு முன்னர் ரயிலில் பயணம் செய்தார் ராகுல் காந்தி. அங்கு தானியங்கள் கொள்முதல் செய்யும் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது, ‘தானியங்கள் கொள்முதல் மிகவும் மெதுவாக நடக்கிறது. உற்பத்திக்கான விலை கிடைக்கவில்லை’ என்றெல்லாம் ராகுலிடம் விவசாயிகள் புகார் கூறினர்.

இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவுரை கூறும் வகையில் ராகுல் பேசினார். அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்படியே பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளின் பரிதாப நிலையை நேரில் பார்க்க வேண்டும். பஞ்சாப் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர். ‘மேக் இன் இந்தியா’ என்று பாஜக கூறி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்தவை இந்தியாவில் செய்யப்பட்டதில்லையா?

மோடி அரசு கூறும் ‘மேக் இன் இந்தியா’ என்பதெல்லாம் பெரும் தொழிலதிபர்களுக்கும், பணக்காரர்களுக்கும்தான். ஏழை விவசாயிகள் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. விவசாயிகள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர். உங்கள் அரசு அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. புயல், சூறைக்காற்றில் விவசாயிகளின் பயிர்கள் நாசமாகி விட்டன.

இவ்வாறு ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசினார்.

ராகுலின் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக கூட்டணிக் கட்சியான அகாலி தள உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பேசும்போது, ‘‘புயல், சூறாவளி ஏற்பட்டபோது ராகுல் காந்தி எங்கு சென்றிருந்தார். நீண்ட நாள் விடுமுறைக்கு பின் வந்த ராகுல், தனது சொந்த தொகுதிக்காவது சென்றாரா? மிக முக்கியமான பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமாகும் வேளையில் வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்க சென்றவர்தான் ராகுல்’’ என்றார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் சத்தம் போட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் ஏற்பட்டது.

ஹர்சிம்ரத் பேச்சைக் கண் டித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டனர்.

அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குறுக்கிட்டு, ‘‘விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளிக்க அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தயாராக இருக்கிறார்’’ என்றார்.

ராம்விலாஸ் பாஸ்வான் பதில் அளித்து பேசியதாவது:

விவசாயிகளைக் காப்பாற்ற வந்த கடவுள் போல் பேசுகிறார் ராகுல். பஞ்சாபில் விற்பனைக்காக 64 லட்சம் டன் தானியங்களை விவசாயிகள் மண்டிகளுக்கு கொண்டு வந்துள்ளனர். அவற்றில் 57 லட்சம் டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு தானியத்தையும் இந்த அரசு கொள்முதல் செய்யும்.

இவ்வாறு அமைச்சர் பாஸ்வான் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x