

நிலம் கையகப்படுத்துதல் மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் நிதின் கட்கரிக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பி யிருந்தார். அதில், விவசாயிகளின் நலன் கருதி கடந்த ஆட்சியில் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போதைய பாஜக அரசு விவசாயிகளின் வாழ் வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மசோதாவை தயாரித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதில் அளித்து சோனியாவுக்கு நிதின் கட்கரி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் விவ சாயிகள் மழையை மட்டுமே நம்பி வாழ்ந்தனர். அரசின் இழப்பீட்டுத் தொகைக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்தனர். இதனால் ஏராளமான விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டனர்.
இப்போது பல்வேறு பாசனத் திட்டங்களை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதற்கு நிலம் தேவை. விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் கருதியே நிலம் கையகப்படுத்துதல் மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மசோதா குறித்து நீங்கள் (சோனியா) மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகிறீர்கள்.
தேசநலனில் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் நிலம் கையகப் படுத்துதல் மசோதாவை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிறப்பித்தது. அந்த மசோதா வரும் ஏப்ரல் 5-ம் தேதியுடன் காலாவதியாகிறது. இதைத் தொடர்ந்து அவசர சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.