இந்தியாவின் மதச்சார்பின்மையை அசைக்க முடியாது: பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவின் மதச் சார்பின்மை வலுவாக உள்ளது. அதை மொழிப் பிரச்சினைகளால் அசைக்க முடியாது என ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பேசும்போது கூறியிருக்கிறார்.
அவர் பேசும்போது, "இந்தியாவின் மதச் சார்பின்மை வலுவாக உள்ளது. அதை மொழி பிரச்சினைகள் போன்ற சிறு விவகாரங்களால் அசைக்க முடியாது. ஜெர்மனி நாட்டு வானொலியில் ஒரு காலத்தில் சமஸ்கிருதத்தில் செய்தி ஒலிபரப்பப்படும். ஆனால், அப்போது இந்திய வானொலிகளில்கூட சமஸ்கிருதத்தில் செய்தி ஒலிபரப்பாகவில்லை. சமஸ்கிருதத்தில் செய்தி ஒலிபரப்பினால் இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயத்தில் அவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். முதலில் நமக்கு தன்னம்பிக்கை வேண்டும். இந்தியாவின் மதச் சர்பின்மையின் வலிமை மீது நம்பிக்கை வேண்டும். மொழிப் பிரச்சினைகளால் இந்திய மதச் சார்பின்மையை அசைக்கக் கூட முடியாது என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்" என்றார்.
ஒரு சில மாதங்களுக்கு முன்னர், மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடத்தை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மொழிகளால் மதச் சார்பின்மைக்கு பாதிப்பு இல்லை என கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
