

குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடியவர்கள் மீது பாஜக பெண் எம்.பி. பணத்தை வாரி இறைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள வெராவலில் புகழ்பெற்ற ‘பல்கா தீர்த்’ என்ற கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜாம் நகர் தொகுதியின் பாஜக பெண் எம்.பி. பூனம் மாடமும் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு நடனமாடியவர்கள் மீது 10 ரூபாய் நோட்டுகளை பூனம் வாரி இறைத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குவிந்திருந்த ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன.
இதுகுறித்து பூனம் மாடம் கூறியதாவது:
சவுராஷ்டிராவில் ஆஹிர் இனத்தவர்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கலாச்சார விழாவைக் கொண்டாடி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்கும் இவ்விழாவில் நான் பங்கேற்றது இது முதல் முறையும் அல்ல, கடைசி தடவையும் அல்ல. இதில் பாஜகவின் பிரதிநிதியாக கலந்துகொள்ளவில்லை. ஆஹிர் இனத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் கலந்துகொண்டேன்.
ஆஹிர் இனத்தவர்களின் நலனுக்காக நடைபெற்ற இதில் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் விவசாயிகளும் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த நிகழ்ச்சியில் நன்கொடை என்ற வகையில்தான் நான் ரூபாய் நோட்டுகளை வீசினேன். இதில் வசூலான பணம் பெண்களுக்கான விடுதிகள் கட்டவும், பசுமாடுகளுக்கான கூடாரம் கட்டவும் பயன்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.