நாடாளுமன்ற துளிகள்: மனிதக் கழிவை அள்ளுவோர் 12,700 பேர்

நாடாளுமன்ற துளிகள்: மனிதக் கழிவை அள்ளுவோர் 12,700 பேர்
Updated on
2 min read

மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் நேற்று பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் பதில் அளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:

2026-ல் 17 கோடி மூத்த குடிமக்கள்

சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் விஜய் சம்ப்லா:

வரும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 17 கோடிக்கும் அதிகமாக இருக்கும். அதாவது மொத்த மக்கள்தொகையில் 12 சதவீதம் மூத்த குடிமக்களாக இருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு மொத்த மக்கள் தொகையில் 11.81 சதவீதமாகவும், 2021-ம் ஆண்டு 14.31 சதவீதமாகவும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை இருக்கும்.

2001-2011-ம் ஆண்டுகளுக்கு இடையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 7.7 கோடியிலிருந்து 10.38 கோடியாக அதிகரித்துள்ளது.

மதமாற்றத் தடைச்சட்டம்

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:

மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதை மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், இச்சட்டம் கொண்டுவரப்படுவதை சிறுபான்மையினரே விரும்பாத ஒரே நாடாக இந்தியா உள்ளது.

மதநல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் எந்தவொரு செயலையும் அரசு சகித்துக் கொள்ளாது. சிறுபான்மையினரை அரசு முழுமையாகப் பாதுகாக்கும் என உறுதியாகக் கூறுகிறேன். மத மோதல்களைப் பொறுத்தவரை, சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாநில அரசுகள்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு எப்படி தலையிட முடியும்? டெல்லயில் அவ்வாறு நடைபெற்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மாநிலங்களில் நடைபெறும் ஒன்றுக்காக மத்திய அரசு மீது பழிசுமத்தக் கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பயிற்சி

சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்:

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் மற்றும் திறன் பயிற்சி அளிப்பதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் திறன்மிகு பயிற்சிகளை அளிக்கும் நிபுணர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் அல்லது திறன் பயிற்சிகளை அளிப்பார்கள். தொழிலாளர் நல அமைச்சகம் உட்பட அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் இதில் பங்குதாரர்களாக இருப்பர்.

திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் சிறப்பு திறன் ஆலோசனகளும் உருவாக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். இந்த பயிற்சிக் குழுக்களில் ஏராளமான தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்கப்படும். அந்நிறுவனங்கள் பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புடமை நிதியை (சிஎஸ்ஆர்) இப்பயிற்சிக்கு அளித்து உதவும்.

ரூ.61,220 கோடி பேரிடர் நிவாரண நிதி

உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு:

2015-2020 காலகட்டத்தில் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு மாநில பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ. 61,220 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மையின் முதன்மைப் பொறுப்பு மாநில அரசைச் சார்ந்தது என்றாலும், மத்திய அரசு மாநில பேரிடர் மேலாண்மை நிதியை(எஸ்டிஆர்எஃப்) வழங்கி பங்கேற்கிறது. இந்த நிதி மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சக மானிய கோரிக்கை மூலம் நிதி ஒதுக்கப்படும்.

மனிதக் கழிவை அள்ளுவோர் 12,700 பேர்

சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்:

இறுதியாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 13 மாநிலங்களில் மனித, சாக்கடைக் கழிவுகளை நேரடியாக அப்புறப்படுத்தும் பணியில் 12,753 துப்புரவுப் பணியாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவ்வகையிலான 2,112 துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ. 40,000 வழங்கப்பட்டுள்ளது. மாற்றுப் பணி வழங்கும் விதத்தில் 97 துப்புரவுப் பணியாளர்களுக்கு திறன் பயிற்சி அல்லது மானிய வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in