

சஹாரா நிறுவன வழக்கு விசார ணையிலிருந்து தான் விலகிக் கொள்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஜகதீஷ் சிங் கேகர் அறிவித் துள்ளார். மே 6 தேதியிட்ட நீதிபதி கேகரின் கடிதம் கிடைக்கப் பெற்று அந்த கடிதம் உரிய உத்தரவுக்காக மே 7-ம் தேதி தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மே 7 ம் தேதியே சஹாரா குழுமங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்த தலைமை நீதிபதி உத்தரவிட்டார் என உச்ச நீதிமன்றத்தின் துணைப் பதிவாளர் ராகேஷ் சர்மா வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதா கிருஷ்ணனும் கேகரும் முடிவு எடுத்த அதே தினத்தில் இந்த கடிதத்தை கேகர் எழுதியுள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மே 14-ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், சஹாரா வழக்கில் நீதிபதிகள் அமர்வுக்கு நிர்பந்தம் தரப்படுகிறது என்று கூறி இருக்கிறார்.
நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜே,எஸ்.கேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மே 6-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் சுப்ரதா ராயை சிறையில் அடைக்க பிறப்பித்திருந்த உத்தரவு சரி யானதே என அறிவித்தது. இந்த வழக்கில் இயற்கை நீதி விதிகள் பின்பற்றப்படவில்லை என சுப்ரதா ராய் தெரிவித்த புகாரையும் மறுத்தது. சஹாரா குழுமத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்த ரூ. 20 ஆயிரம் கோடியை திருப்பித் தராததால் அவர்களுக்கு இந்த சிறைத் தண்டனை. ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றால் இப்போதைக்கு ரூ. 10 ஆயிரம் கோடியை திருப்பிச் செலுத்த புதிய திட்டத்தை நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டும் என்றும் சுப்ரதா ராய் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
மார்ச் 4-ம் தேதியிலிருந்து 65 வயது சுப்ரதா ராயும் சஹாரா நிறுவனத்தின் 2 இயக்குநர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.