

நிர்பயா விவகாரம் குறித்த பிபிசி-யின் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை இந்தியா தடை செய்து பெரிய தவறு செய்து விட்டது. இந்தப் போக்கு சரியல்ல என்று கொலம்பியா பல்கலைக் கழக தலைவர் லீ போலிங்கர் தெரிவித்தார்.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறும் போது, “தடை செய்தது தவறு என்றே நான் கருதுகிறேன். உலக மனித உரிமைகள் தீர்மானம் பிரிவு 19 இது பற்றி தெளிவாக வரையறை செய்துள்ளது. இத்தகைய பேச்சுரிமை, அல்லது கருத்துகளை உடைய படங்கள் ஆகியவற்றை தடை செய்யக்கூடாது மாறாக அவை பாதுகாப்புக்கு உரியது” என்றார்.
மேலும் இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட்டால் ஆணாதிக்க பார்வைகள் பெருகும் என்றும், பெண்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வளரும் என்றும், இந்தியாவைப்பற்றி மோசமான கருத்துகளை பரப்ப வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு கூறிய காரணங்கள் பற்றி லீ போலிங்கரிடம் கேட்ட போது, "மரபுசார்ந்த பகுப்பாய்வில் இந்த பேச்சுரிமை அல்லது கருத்துச் சுதந்திரம் நம் சமூகத்தை மோசமாகச் சித்தரித்து விடும் என்று எந்த அரசும் கூறுவதற்கு அனுமதி கிடையாது.
மேலும், இத்தகைய வெளிப்பாடுகள் அபாயகரமானவை என்றும், இதனால் மக்கள் உணர்வுகள் காயமடையும் என்றும் அரசுகள் கூறுவது போதாமையை உணர்த்துவதே. பொது விவகாரங்களை மக்கள் விவாதிக்க வேண்டும், எது நல்லது எது கெட்டது என்பதை அவர்கள் தேர்ந்தெடுக்க இது உதவும், மேலும் இதனடிப்படையில் சமூகத்தின் எதிர்வினை என்ன என்பது பற்றியும் மக்கள் தங்கள் சுயமான தீர்ப்புக்கு வர முடியும். ஆனால் அரசுகள் கூறும் காரணங்கள் இவற்றைச் செய்ய விடாமல் தடுக்கும் உத்தி தவிர வேறில்லை.
இதில் ஒரு விஷயம் என்னவெனில் பேச்சுரிமையை தடை செய்வது மிகவும் ஆபத்தானது. ஆபாசம், அவதூறு, வெறுப்பை தூண்டும் விதமான பேச்சு ஆகியவை தடை செய்யப்படலாம். ஆனால் பொது விவகாரம் குறித்த சொல்லாடல்கள் வேறு வகையைச் சேர்ந்தவை. நாம் ஜனநாயகத்துக்கு கடமை மிக்கவர்களாக இருக்கிறோம் என்பதன் மையப்பகுதி இதுவே.” என்றார்.