தைரியமாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்: பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு நீதிமன்றம் அறிவுரை

தைரியமாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்: பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு நீதிமன்றம் அறிவுரை
Updated on
1 min read

குஜராத் மாநிலம் சவுராஷ்ட்ரா பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி போலீஸாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தன் வீட்டுக்கு வெளியில் இருந்து தான் கடத்தப்பட்டதாகவும், பின்னர் ஏழு பேர் கொண்ட குழு ஒன்றால் தான் பாலியல் கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் தன்னை 10 மாதங்களாக வேறு வேறு இடங்களுக்கு கொண்டு சென்றதாகவும் கூறியிருந்தார்.

போலீஸாரிடத்தில் அவர் புகார் அளிக்கும் போது 24 வார கர்ப்பிணி யாக இருந்தார். தொடர்ந்து அவர் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தனது கருவை கலைத்துவிட மனு தாக்கல் செய்திருந்தார். அதில் இந்தக் குழந்தை பிறந்தால், அதனை எனது கணவரும் அவரது குடும்பத்தாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கோரப்பட்டிருந்தது. ஆனால் அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

பின்னர், உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். தற்சமயம் அவர் 28 வார கர்ப்பிணியாக உள்ளார். அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி ஜே.பி.பர்திவாலா கூறியதாவது:

பாலியல் வன்கொடுமை காரணமாக உருவான கருவை சுமந்துகொண்டிருப்பது உளவியல் ரீதியாக‌ மிகவும் கடினமான ஒன்று என்பது எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட நிலையில், நமது சமூகத்தில் அவர் இகழ்ச்சிக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாவார்.

எனினும், பேறுகாலத்தில் தகுந்த சமயம் வந்தவுடன் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண் டும். ஒரு நீதிபதியாக இவ்வாறு தீர்ப்பு வழங்குவது எனக்கு சுலபம். ஆனால் பாதிக்கப்பட்ட மனுதாரர் அதை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

எனினும், எவ்வளவுதான் கடினமான சட்டமாக இருந்தாலும், அது சட்டமாக இருப்பதால் நாம் அதை மதித்து நடக்க வேண்டும். இந்ந நிலையில் கருக்கலைப்பு செய்வது தனது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை மனுதாரர் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in