

மதுபோதையில் கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படும் வகையில் விபத்து ஏற்படுத்தியதாக இந்தி நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் வரும் மே 6-ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையின் மேற்குப்பகுதியிலுள்ள பாந்த்ராவின் அமெரிக்கன் எக்ஸ்பிரல் பேக்கரி அருகே, சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான் கானின் கார் மோதியது. இதில், நூருல்லா மெஹபூப் ஷெரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இவ்வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விபத்து ஏற்படுத்திய காரை சல்மான் கான் மதுபோதையில் ஓட்டி வந்ததாகவும், விபத்து நடந்தபோது சல்மான் கானுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த காரைத்தான் ஓட்டி வரவில்லை எனவும், தனது டிரைவர் அசோக் சிங்தான் ஓட்டினார் எனவும் சல்மான் கான் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேஷ்பாண்டே வழக்கின் தீர்ப்பை வரும் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மனு நிராகரிப்பு
ஜுஹுவில் உள்ள ஜே.டபிள்யூ மரியட் ஓட்டலில் இருந்து விபத்து நடந்த பகுதிக்குச் செல்வதற்கு சல்மான் கானுக்கு 30 நிமிடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. எனில், அவர் 90 முதல் 100 கிமீ வேகத்தில் தனது காரை ஓட்டியிருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை நிரூபிக்கும் விதத்தில் பந்தரா காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திர கனே, நடந்த விபத்தை மறுக்கட்டமைப்பு செய்துகாட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சல்மானின் வழக்கறிஞர் அந்த ஆய்வாளர் மற்றும் அதுதொடர்பான செய்தி களை வெளியிட்ட இரு ஊடகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு புகாரைத் தொடர்ந்தார்.
ஆனால், ஊடகங்களும், காவல்துறை ஆய்வாளரும் மன்னிப்புக் கோரியதால் அம்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.