

நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி, வதோதரா தொகுதிகளில் வதோதரா தொகுதியிலிருந்து அவர் ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது பற்றிய யூகங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அமித் ஷா வதோதராவில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் பாஜக தரப்பில் இது பற்றி உறுதி செய்யப்படவில்லை. மோடிதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கட்சித் தரப்புச் செய்திகள் கூறியுள்ளன. உத்திரப் பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளில் பாஜக சற்றும் எதிர்பாராத விதமாக 71 தொகுதிகளைக் கைப்பற்றியதன் பின்னணியில் அமித் ஷா உள்ளார். இந்த வெற்றிக்காக அமித் ஷாவை வதோதரா தொகுதியில் போட்டியிடச் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாது, அமித் ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதவியும் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, பாதுகாப்புத் துறை இவருக்கு வழங்கப்படலாம் என்ற அளவுக்கு யூகங்கள் பலமாகியுள்ளது. இதனால்தான் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பாதுகாப்புத் துறையும் இப்போதைக்குக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.