

டெல்லியில் ஆம் ஆம்தி பேரணியின்போது விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்குமாறு டெல்லி போலீஸுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோரை ராஜ்நாத் சிங் இன்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசினார். டெல்லி போலீஸ் கமிஷனரை சந்தித்த போது விசாரணையை விரைந்து முடிக்குமாறு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
"விவசாயி தற்கொலை விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமனாது. இதன் விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராஜ்நாத் கூறியுள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பேரணியின்போது, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயி ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.