Published : 24 Apr 2015 09:05 AM
Last Updated : 24 Apr 2015 09:05 AM

செம்மரக் கடத்தல் தொடர்பாக நடிகை மீது வழக்கு

செம்மரக் கடத்தல் தொடர்பாக தெலுங்கு புதுமுக நடிகை நீத்து அகர்வால் மீது ஆந்திர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அறிந்ததும் நடிகை தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களுக்கு ஆந்திர போலீஸார் சென்றுள்ளனர்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, செம்மரக் கடத்தல் வழக்கில், ஆந்திர போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் ‘முன்னவர்’ திரைப்பட நடிகர் சரவணனை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தை சேர்ந்த இரு திரைப்பட தயாரிப்பாளர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் கூறி உள்ளனர்.

செம்மரக் கடத்தலில் முக்கிய புள்ளிகளான சென்னையை சேர்ந்த மூசா, நாகராஜன், லட்சுமணன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று ஆந்திராவிலும் செம்மரக் கடத்தலில் பல கோடிகளை சம்பாதித்து அந்த பணத்தை வைத்து திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்ட மஸ்தான் வலி என்பவரை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். இவர் தெலுங்கில் ‘பிரேம பிரயாணம்’ எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் கதாநாயகியாக நீத்து அகர்வால் நடித்துள்ளார். இவருக்கு இதுதான் முதல் படமாகும்.

இந்த படத்திற்கு பின்னர் நீத்து அகர்வால் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில், கைது செய்யப்பட்ட மஸ்தான் வலியை போலீஸார் விசாரித்ததில், செம்மரக் கடத்தல் தொடர்பான அனைத்து பண விவகாரங்களையும் நடிகை நீத்து அகர்வால் கவனித்து வருகிறார் என தெரிய வந்தது. அதன்படி நீத்து அகர்வாலின் வங்கிக் கணக்குகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பலருக்கு பல கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று நடிகை நீத்து அகர்வால் மீது செம்மரக் கடத்தல், செம்மரம் வெட்டுதல், செம்மர போக்குவரத்துக்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆந்திர போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x