உயரிய நெறிகளை பின்பற்றி நீதிபதிகளை நியமிக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

உயரிய நெறிகளை பின்பற்றி நீதிபதிகளை நியமிக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
Updated on
1 min read

நீதிபதிகள் நியமனத்தில் உயர்ந்த தரத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

பிஹார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக அதைத் தொடங்கி வைத்த பிரணாப் மேலும் கூறியதாவது:

நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவது மற்றும் நியமிக்கப்படுவது உள்ளிட்ட நடைமுறைகளில் உயர்ந்த தரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதில் நாம் வேகமாகச் செயலாற்றினாலும், தரத்தில் நாம் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. நம் நாட்டில் இன்று நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. அந்த வழக்குகளை நாம் விரைந்து முடிக்க வேண்டும். ஏனெனில், தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.

எந்தெந்த நீதிமன்றங்களில் நீதிபதி களுக்கான காலியிடங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனவோ, அவற் றுக்கு முன்னுரிமை கொடுத்து நீதிபதிகள் நியமனம் நடைபெற வேண்டும்.

உதாரணத்துக்கு பாட்னா உயர் நீதிமன்றத்தில் 43 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் 31 நீதிபதிகள்தான் உள்ளனர். இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, இங்கு 1,33,297 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தவிர, இந்த நீதிமன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்ட இதர கீழமை நீதிமன்றங்களில் சுமார் 20 லட்சம் வழக்குகள் உள்ளன. அவற்றில் சுமார் 17 லட்சம் வழக்குகள் கிரிமினல் வழக்குகள் ஆகும்.

பாட்னா உயர் நீதிமன்றத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது, நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த சையத் ஹசன் இமாம், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவர் சச்சிதானந்த் சின்ஹா போன்ற தலைவர்கள் இங் கிருந்து வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in