Last Updated : 10 Apr, 2015 09:18 AM

 

Published : 10 Apr 2015 09:18 AM
Last Updated : 10 Apr 2015 09:18 AM

மதரஸாவில் உருது பயிலும் இந்துக்கள், ஆர்.எஸ்.எஸ். பள்ளியில் முஸ்லிம்கள்: உ.பி.யில் மதநல்லிணக்க உதாரணம்

மதக்கலவரத்துக்கு பெயர் போன உ.பி.யில் மதநல்லிணக்கத்துக்கும் உதாரணம் கூறமுடிகிறது.

உ.பி. வடமேற்கில் உள்ளது ராம்பூர் நகரம். இங்கு தானாகன்ஞ் பகுதியில் உள்ள அஸ்தபல் தெருவில் ‘மதரஸா ஜமியத்துல் அன்சாரி’ எனும் பெயரில் ஒரு மதரஸா உள்ளது. இதற்கு மாநில பள்ளிக் கல்வித் துறையின் அங்கீ காரம் கிடைத்ததன் காரணமாக அதில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்து மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் முஸ்லிம் மாணவர்கள் மட்டுமே பயிலும் உருது மொழியை பயின்று வருகிறார்கள். வழக்கமாக, இந்து மாணவர்கள் சமஸ்கிருத மொழியையும் பயில்வார்கள்.

இது குறித்து ‘தி இந்து’விடம் அப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி ஷிவானி சர்மா கூறும் போது, “நாங்கள் இங்கு ஆங்கிலம், இந்தி ஆகிய பாடங்களுடன் முஸ்லிம் மாணவர்களுடன் இணைந்து உருது மொழி மற்றும் மறையியல் பாடங்களையும் பயின்று வருகிறோம். இதை ஒரு மதம் சார்ந்த பாடங்களாக கருதாமல் வழக்கமான கல்வியாகக் கருதியே கற்று வருகிறோம். இந்தப் பாடங் களை எந்தவித கட்டாயமும் மின்றி, எங்கள் சுயவிருப்பத்துடன் பயில்வதை எங்கள் குடும்பத்தின ரும் நன்கு அறிவார்கள்” என்றார்.

கடந்த 1951-ம் ஆண்டு தொடங் கப்பட்ட பழமையான மதரஸாக் களில் ஒன்றான ஜமியத்துல் அன்சாரியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 இந்து மாணவர்கள் கல்வி பயில்வது வழக்கமாக உள்ளது. இங்கு தற்போது 15 இந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதேபோல், ராம்பூர் நகரின் சுவார் சாலையில் ‘சரஸ்வதி வித்யா மந்திர் இன்டர் காலேஜ்’ எனும் பெயரில் ஓர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. உ.பி. மாநில கல்வித் துறையின் அங்கீகாரத்துடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் நேரடி நிர்வாகத்தில் இந்தப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 1,126 பேர் கல்வி பயில்கின்றனர்.இதில் முஸ்லிம் மாணவ, மாணவிகள் 120 பேரும் படிக்கின்றனர்.

இங்கு இந்துமத முறைப்படி காலை பிரார்த்தனையில் காயத்ரி மந்திரம் ஓதப்படுகிறது. பிறகு சரஸ்வதி வந்தனம் மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக உணவு மந்திரங்களும் ஓதப்படுகின்றன. இந்த அனைத்து மந்திரங்களையும் முஸ்லிம் மாணவர்களும் பிழையின்றி ஓதி கல்வி பயில்கிறார்கள்.

இது குறித்து ‘தி இந்து’விடம் அப்பள்ளி முதல்வர் விஜயேந்தர் குமார் கூறும்போது, “இந்துக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் படி இங்கு கல்வி பயிற்றுவிக்கப் படுகிறது. இங்கு முஸ்லிம் மாணவர்கள் தாமாக முன்வந்து மந்திரங்களை ஓதுகிறார்களே தவிர அதற்காக, நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. எங்கள் பள்ளியில் நல்ல கல்வி கிடைக் கும் காரணத்தால் முஸ்லிம் மாண வர்களும் இங்கு இணைந் திருக்கிறார்கள். இங்கு கல்வி பயின்ற முஸ்லிம் மாணவர்கள் பலர் இன்று மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்” என்றார்.

நம் நாட்டிலேயே அதிக அளவில் மதக்கலவரம் நடைபெறும் மாநிலமாக உ.பி. இருந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் மதத்தின் அடிப்படையில் தங்கள் வாக்கு வங்கிகளை வழிநடத்தி வருகின்றன. இந்த நிலையில் ராம்பூரில் முஸ்லிம் மதரஸாவும், ஆர்.எஸ்.எஸ். பள்ளியும் மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக விளங்கி வருவதாகப் பலரும் பாராட்டுகின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ராம்பூரைச் சேர்ந்த சையது ஆமீர் மியான் கூறும்போது, “மதரஸாவின் இந்து மாணவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். பள்ளியின் முஸ்லிம் மாணவர்களுக்கும் மதம், மொழி மற்றும் மந்திரம் என்பது ஒரு பொருட்டல்ல. அதை அவர்கள் கல்வி எனும் பெயரால் மட்டுமே கற்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தக் கல்வியால் மனிதனுக்கு அறிவு மற்றும் ஒழுக்கம் கிடைக்குமே தவிர அதைக் கற்பதினால் ஒரு முஸ்லிம், இந்துவாகவும், ஒரு இந்து, முஸ்லிமாகவும் மாறிவிடப் போவதில்லை” என்றார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வட இந்தியாவில் இருந்த மதரஸாக்களில் இந்து மற்றும் முஸ்லிம் மாணவர்கள் இணைந்து கல்வி பயின்று வந்தனர். இந்த மதரஸாக்கள், பொதுவான பள்ளிகள் போல் உருது மற்றும் சமஸ்கிருதப் பாடங்களை பயிற்றுவித்து வந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x