

சண்டீகர் மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான குல் பனாக்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கவர்ச்சி அரசியலில் ஆம் ஆத்மியும் களமிறங்கியுள்ளது.
சண்டீகர் தொகுதி வேட்பாளராக குல் பனாக்கை, ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா அறிமுகம் செய்து வைத்தார்.
இது தொடர்பாக குல் பனாக் கூறுகையில், “எல்லா நாடுகளின் வரலாற்றிலும் மாற்றத்துக் காக காத்திருக்கும் தருணம் இருக்கும். ஆம் ஆத்மி மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் மூலம் நாடு மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. நாட்டுக்கும், மக்க ளின் நலவாழ்வுக்கும் நேரடி பங்களிப்பைச் செலுத்தக் கிடைத்த வாய்ப்பால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
உங்களால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என நீங்கள் நம்பினால் நிச்சயம் முடியும். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்” என்றார்.
கடந்த 1979-ல் பிறந்த குல் பனாக் 1999-ம் ஆண்டு இந்திய அழகியாகத் தேர்வானார். பிரபஞ்ச அழகிப் போட்டியிலும் இவர் பங்கேற்றார். ஹலோ, ஸ்ட்ரெய்ட் உள்பட பல்வேறு ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார்.
மறைந்த நகைச்சுவை நடிகர் ஜஸ்பால் பட்டியின் மனைவி சவீதா பட்டியை சண்டீகர் தொகுதி வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்திருந்தது. ஆனால், அவர் விலகி விட்டார்.
ஆம் ஆத்மி திரைத்துறை பிரபலங்களை களமிறக்கி கவர்ச்சி அரசியலில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே, நகைச்சுவை நடிகர் பகவந்த் மான் சங்ரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.