

அடிக்கடி தொலைபேசி இணைப்பு தொடர்பு அறுதல் (கால் டிராப்பிங்), அதிகப்படியான கட்டணம், வெளிப்படையற்ற தன்மை ஆகியவை குறித்து வோடஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மீது பாஜக எம்.பி.க்கள் சிலர் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாஜக எம்.பி. கிரித் சோமையா கூறும் போது, “டெல்லி, மும்பையில் வோடஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளன. இந்நிறுவனங் களின் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து புகார் தெரிவித்துள்ளோம். மும்பை, டெல்லியில் 15 முதல் 20 நொடிகளுக்குள் ‘கால் டிராப்’ ஆவது வாடிக்கையாகிவிட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டு கோள் விடுத்துள்ளோம்” என்றார்.
‘மூன்று நிமிடங்கள் பேசுவதற்கு முன்பாகவே பல முறை இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதனால், ஓர் அழைப்புக்கு ஒருமுறை கட்டணம் செலுத்துவதற்குப் பதில் மூன்று முறை கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் வாடிக்கையாளருக்கு ஏற்படு கிறது. இதுதொடர்பாக புகார் தெரிவித்தாலும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை’ எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.க்கள் கோபால் ஷெட்டி, ராம்தாஸ் டாடாஸ், நரேந்திர ஸ்வாய்கர், ஜெய்ஸ்கீரிபன் படேல், லாலுபாய் பி படேல், சுனில் பல்ராம் கெய்க்வாட், கேசவ் மவுரியா உட்பட பலர் மத்திய அமைச்சரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.