

பெட்ரோலிய அமைச்சகத்தின் சில ஆவணங்கள் திருடுபோனது தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள 13 பேர் மீது டெல்லி போலீஸார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஆகாஷ் ஜெயின் முன்னிலையில் டெல்லி போலீஸின் குற்றப் பிரிவு போலீஸார் 44 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதுகுறித்து நாளை விசாரிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியாக 42 பேரை சேர்த்துள்ளனர். எனினும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான அலுவல் ரகசிய காப்பு சட்டத்தின் (ஓசிஏ) கீழ் குற்றம் சாட்டப்படவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோலிய அமைச்சகத்தில் சில ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் 5 பேர் உட்பட இதுவரை 16 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.