

கம்பெனிகள் சட்ட விதிகளை மீறி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் கூடுதல் ‘டின்’ எண்களைப் பெற்றதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறியுள்ளார்.
தனியார் தொழில் நிறுவனங் களின் இயக்குநர்களாக இருப் பவர்கள் மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையிடம் விண்ணப் பித்து ‘டின்’ எண் பெறுவது கட்டா யம். அப்போதுதான், இயக்குநர் என்ற முறையில் தொழில் நிறுவன ஆவணங்களில் கையெழுத்திட முடியும். இந்த எண் பெற வருமான வரிக் கணக்கு எண்ணையும் தாக்கல் செய்வது அவசியமாகும். இந்த டின் எண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பெற்றுள்ளதாக பிரியங்கா, கார்த்தி மீது புகார் கூறப்பட்டுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகச் செயலருக்கு அனுப்பிய புகார் மனு:
பிரியங்கா தன் பெயரில் மூன்று ‘டின்’ எண்களைப் பெற்றுள்ளார். தமிழகத்தில் கார்த்தி சிதம்பரமும் ஒன்றுக்கு மேற்பட்ட ‘டின்’ எண் களைப் பெற்றுள்ளார். இது கம்பெனிகள் சட்டப் பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றம். இக் குற்றத்துக்கு சட்டப்படி, ஆறு மாதம் வரை சிறை, ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். எனவே, அவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு கம்பெனிகள் விவகாரத் துறை செயலர் நாவித் மசூத் அனுப்பியுள்ள பதில்:
ஒன்றுக்கும் மேற்பட்ட ‘டின்’ விண்ணப்பங்கள் சமர்ப்பித்திருப் பதை பிரியங்கா ஒப்புக் கொண்டுள் ளார். இது, தற்செயலாக நடந்த தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார். விதி 621 ஏ-ன் படி, இந்த தவறை திருத்திக்கொள்ள முடியும். அதன்படி, ‘டின்’ எண்களை ஒருங் கிணைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் தெரிந்தே ஒன்றுக்கும் மேற்பட்ட ‘டின்’ விண் ணப்பங்கள் அளித்துள்ளதால், அவர் 15 நாட்களுக்குள் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து, அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறும்போது, “மூன்று ‘டின்’ எண்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை ஒருவர் அளிக்க முடியாது. அப்படி அளிப்ப தென்றால், மூன்று வருமான வரிக் கணக்கு எண்களை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வருமான வரிக் கணக்கு எண் வைத்திருப்பது, வருமான வரிச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். பிரியங்கா தவறு செய்திருப்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். பிரியங்காவின் மாமியார் மவுரீன் வதேராவும் இரண்டு ‘டின்’ எண்கள் வைத்துள்ளார். கார்த்தி சிதம்பரமும் அதே தவறை செய்துள்ளார். எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்துள்ள நிலையில் சுப்பிரமணியன் சுவாமி கிளப்பி யுள்ள இந்த புதிய விவகாரம், பிரியங்கா மீது புதிய வழக்கு தொடர வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.