

டெல்லியின் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் தோமரின் சட்டக் கல்விக்கான சான்றிதழ் போலியானது என தெரிய வந்துள்ளது. இதனால், அவரை தம் அமைச்சரவையில் இருந்து நீக்க முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தயாராவதாகக் கருதப்படுகிறது.
டெல்லியின் சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரின் (வயது 48) கல்வி சான்றிதழ் போலியானது என அம் மாநில உயர் நீதிமன்றத்தில் சந்தோஷ்குமார் சர்மா என்பவர் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். இதை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், தோமர் சட்டம் பயின்றதாகக் கூறிய பிஹாரில் உள்ள திலக் மாஞ்சி பாகல்பூர் பல்கலைகழகத்திற்கு அவரது சான்றிதழை உறுதிபடுத்தும்படி கூறி நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கான தம் பதிலை நேற்று அனுப்பிய பாகல்பூர் பல்கலைகழகம், தோமர் அங்கு கல்வி பயின்றதற்கான சான்றுகள் இல்லை எனவும், அவரது கல்வி சான்றிதழின் சீரியல் எண் 3687, கடந்த ஜூலை 29, 1999 –ல் சஞ்சய்குமார் சௌத்ரி என்ற மாணவருக்கானது என்றும் பதில் அனுப்பியுள்ளது. இதனால், தோமரின் சட்டக் கல்வி பயின்றதாக சமர்பித்துள்ள சான்றிதழ் போலியானது எனத் தெரிய வந்துள்ளது.
இதேபோன்று, உபியின் டாக்டர் ராம் மனோகர் லோகியா அவத் பல்கலைகழகத்தில் தாம் அறிவியல் பாடத்துறையில் பட்டம் பெற்றதாகக் கூறியிருந்தார். இதுவும் போலியானது என இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவராக இணைந்திருக்கும் டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம், தம் சார்பில் உறுதிபடுத்தப்பட்டதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதனால், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியோரிடம், தோமர் தம்மை வழக்கறிஞராகபதிவு செய்ததன் மீது விசாரித்து வரும் ஆகஸ்ட் 20-க்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளரும் மக்களவை உறுப்பினருமான மீனாட்சி லேக்கி கூறுகையில்,
‘டெல்லியின் சட்ட அமைச்சராக இருப்பவரின் சான்றிதழ்கள் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதன்மூலம் ஒரு சட்ட அமைச்சரே சட்டத்தை தமக்கு சாதகமாக எப்படி வளத்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இவரது கட்சியினர் பேசும் அரசியல் மற்றும் அதன் மரபுகளின் உண்மை முகம் வெளுத்துள்ளது. இதுபோல் தவறான உறுதிமொழியை அளித்து ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லிவாசிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.’ என வற்புறுத்தி உள்ளார்.
இதே பிரச்சனையில் கருத்து கூறிய டெல்லியின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய்மாக்கன், ‘உடனடியாக சட்ட அமைச்சர் நீக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி நாளை மறுநாள் வியாழக்கிழமை எங்கள் கட்சியின் சார்பில் டெல்லி தலைமை செயலகம் முன்பாக போராட்டம் நடத்தப்படும்.’ என அறிவித்துள்லார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள தோமர் மீதான வழக்கு தற்போது அவரது பட்டப்படிப்பு மற்றும் சட்டப்படிப்பு ஆகிய இரு சான்றிதழ்களும் பொய்யானவை எனத் தெரிய வந்திருப்பதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதும் உறுதியாகி உள்ளது. இதை எந்நேரமும் முதல் அமைச்சர் கேஜ்ரிவால் செய்ய இருக்கிறார் என ஆம் ஆத்மி கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இது குறித்து மாலை டெல்லி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தோமர், தம் சான்றிதழ் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப் பற்றி தாம் பேச விரும்பவில்லை எனவும், வழக்கின் இறுதியில் உண்மை என்ன என்பது தெரிந்து விடும் என்றும் பதிலளித்தார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞர்கள் சங்கங்களில் பதிவு செய்திருந்தாலும் தோமர் இதுவரை நீதிமன்றங்களில் வாதாடவில்லை.
இவர், அரசியலுக்கு வரும் முன்பாக டெல்லியின்சகுர்பத்தி தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் எஸ்.சி.வத்ஸின் உதவியாளராக இருந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இணைந்தவர் அதில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
2013 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் திரி நகரில் போட்டியிட்டவர் பாஜக வேட்பாளர் நந்த்கிஷோர் கர்க்கிடம் 2,809 வாக்குகளில் தோற்றார். இதனால், மீண்டும் போட்டியிட கிடைத்த வாய்ப்பில் அதே கர்க்கை சுமார் 22,311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டெல்லியின் சட்டத்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றார்.