நாடாளுமன்ற துளிகள்: விளையாட்டு வீரர்களுக்கு இலவச ரயில் பயணம்

நாடாளுமன்ற துளிகள்: விளையாட்டு வீரர்களுக்கு இலவச ரயில் பயணம்
Updated on
2 min read

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் நேற்று அளித்த பதில்கள் வருமாறு:

விளையாட்டு வீரர்களுக்கு இலவச ரயில் பயணம்

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா:

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவர்கள், அர்ஜுனா, துரோணாச்சார்யா, தயான் சந்த் விருதுகளை பெற்றவர்கள், ஆசியான் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றவர்கள் ஆகியோருக்கு ரயிலில் முதல் வகுப்பு/2-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிப்பதற்கான அன்பளிப்பு அட்டைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த அட்டையைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர் மட்டும் நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் (கொல்கத்தா மெட்ரோ ரயில் தவிர) வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த வசதியை 633 விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

செல்போனில் புகார்களை பதிவு செய்ய புது வசதி

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா:

ரயில் சேவை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை செல்போன் மூலம் பதிவு செய்வதற்கு வசதியாக ஒரு செல்போன் அப்ளிகேஷன் கடந்த மார்ச் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஆண்ட்ராய்டு வசதியுடன் கூடிய செல்போனிலிருந்து புகார்களை அளிக்கலாம். இந்தப் புகார்கள் கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய தீர்வு காணப்படும். எனினும், தீர்வு காண்பதற்கான காலக்கெடு எதுவும் இல்லை. செய்தி அறிக்கைகள் மற்றும் ரயில்வே துறையின் பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களிலும் இதுகுறித்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சூரிய ஒளி, காற்று சக்தி மூலம் மின் உற்பத்தி

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா:

எரிபொருள் தேவைக்காக பெட்ரோலிய பொருட்களை நம்பி இருப்பதைத் தவிர்த்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்து வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சூரிய ஒளி மற்றும் காற்று சக்தி மூலம் 20 மெகாவாட் திறன் கொண்ட, மின்சாரம் சேகரிப்பதற்கான சாதனங்கள் ரயில்வே மூலம் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சூரிய ஒளி மூலம் 1,000 மெகா வாட்டும், காற்று சக்தி மூலம் 157.5 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி மையங்கள்

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா:

ரயில்வே உற்பத்தி மையங்கள் அமைந்துள்ள மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் தொடர்பான விதிமுறைகள் கடைபிடிக்கப்படும். ஏற்கெனவே அமைந்துள்ள ரயில்வே உற்பத்தி மையங்கள் அனைத்திலும் ஐஎஸ்ஓ 14001 சுற்றுச்சூழல் நிர்வாக முறை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான தணிக்கையின்படி நடைமுறைகள் கையாளப்படும்.

தொழிற்சாலை தகராறால் ரூ.200 கோடி உற்பத்தி இழப்பு

மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:

கடந்த ஆண்டில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட 146 தொழில் தகராறு காரணமாக ரூ.200 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.

பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு புகார் குறைந்தது

மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்:

பெட்ரோல் பங்க்குகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இதுதொடர்பான முறைகேடு புகார்கள் குறைந்துள்ளன. இதனால் முறைகேடாக ஒதுக்கப்பட்டதாகக் கூறி உரிமத்தை ரத்து செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தங்கம் உற்பத்தி 8 சதவீதம் குறைந்தது

மத்திய இரும்பு மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய்:

கடந்த 2014-15 நிதியாண்டில் நாட்டின் தங்கம் உற்பத்தி 8 சதவீதம் குறைந்து 1.43 டன்னாக இருந்தது. இது 2013-14 நிதியாண்டில் 1.56 டன்னாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in