

ராகுல் காந்தி நீண்ட விடுப்புக்கு பின்னர் நாடு திரும்பியதுக்கு வாழ்த்துக் கூறிய பாஜக, ராகுல் ஏற்படுத்திய குழப்பங்களுக்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும் என்று கிண்டலாக தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 56 நாட்கள் விடுப்புக்குப் பிறகு இந்தியா திரும்பினார். இன்று காலை 11.15 மணியளவில் தாய் ஏர்வேஸ் மூலம் பாங்காங்கிலிருந்து அவர் டெல்லி வந்து சேர்ந்தார்.
அவர் கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கத்தின்போது விடுப்பு எடுத்துச் சென்றார். அவர் நாடு திரும்பியுள்ள போதிலும் விடுப்புக்கான சரியான காரணம் தற்போதைய நிலைவரை தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ராகுலின் விடுப்புக்கு பின்னான வருகையை பாஜக கிண்டலடித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, "ராகுல் திரும்பி வந்ததற்காக காங்கிரஸுக்கு வாழ்த்துகள்.
ராகுல் காந்தி சரியான குழப்பத்தில் நிறைந்துள்ளார். வாழ்க்கையில் தான் என்னவாகப்போகிறோம், என்னவாக விரும்புகிறோம் என்று அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
அவர் அரசியலைத் தொடரப் போகிறாரா? என்பதும் அவருக்கு தெரியவில்லை. இந்த குழப்பத்தை அவர் மக்களுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
காங்கிரஸும் குழப்பத்தில் உள்ளது. ராகுலை என்ன செய்வது என்ற குழப்பத்தில் அந்தக் கட்சி உள்ளது. அவரை கட்சியின் சார்பில் மக்கள் முன் நிறுத்துவதா அல்லது ஒதுக்குவதா? என்று தலைமைக்கு புரியவில்லை.
காங்கிரஸ் சுக்கான் இல்லாத கப்பலாகி விட்டது. தலைமைத்துவ பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு முக்கிய கட்சியின் தலைவர் நீண்ட நாட்களுக்கு காணாமல் போய் திரும்பி வருவதும் அது செய்தியாவதும் இதுதான் முதல் முறை.
ராகுல் காந்தி தவறான காரணங்களுக்காக செய்திகளில் முன்னிறுத்தப்பட்டுவிட்டார்" என்றார்.
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, “காணாமல் போவது மற்றும் மீண்டும் வருவது ஆகியவற்றுக்காக செய்திகளில் ராகுல் இடம்பிடிப்பது என்பது காங்கிரஸுக்கு கவலையளிக்கும் விஷயம்” எனத் தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் கூறும்போது, “காங்கிரஸின் வாரிசு நாட்டைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கியிருப்பது சமீப காலங்களில் நடந்ததேயில்லை” எனத் தெரிவித்துள்ளார்