

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கர்நாடக அரசை கண்டித்து கடந்த 28-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
இந்நிலையில் மேகேதாட்டு திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்து கர்நாடகத்தில் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக கன்னட சலுவளி கட்சியின் தலைவரும், கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளருமான வாட்டாள் நாகராஜ் நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், சிக்கபள்ளாபூர், கோலார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீராதாரமாக இருக்கும் காவிரியை கர்நாடகத்திடம் இருந்து பறிக்க தமிழகம் முயற்சி செய்கிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எனவே மேகேதாட்டு திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பு களை கண்டித்து நாளை கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு நடத்தப்படும். இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளும், 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களும், வர்த்தக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதே போல தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.